பெரியார் நினைவு சமத்துவபுரங்களைச் சீர்செய்க! வைகோ அறிக்கை
தமிழக முதல்வராக டாக்டர் கலைஞர் அவர்கள் பொறுப்பேற்றிருந்தபோது உருவாக்கிய மகத்தான திட்டம்தான் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள். சாதி வேறுபாடுகளைக் களையவும், சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உருவாக்கவும், தமிழ்நாடு முழுவதும் இத்தகைய சமத்துவபுரங்களைக் கலைஞர் அரசு உருவாக்கி பல்வேறு மதத்தினரையும் சாதியினரையும் அங்கு குடியமர்த்தி அவர்களுக்குப் பொது நூலகம், பூங்கா, சுடுகாடு என மாதிரி நகரமாக அவற்றை சிறப்புடன் பராமரித்தது.
தமிழகம் முழுவதிலும் உள்ள சமத்துவபுரங்களின் முகப்பில் தந்தை பெரியார் அவர்களின் உருவச் சிலைகளை அமைத்து அவற்றை தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களும், துணை முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும் திறந்து வைத்தனர். இந்தியாவிலேயே இத்தகைய சிந்தனையோ செயல் திட்டமோ தமிழகத்தைத் தவிர வேறு எங்கும் இல்லை என்ற சிறப்பினையும் கலைஞர் அரசு நடைமுறைப்படுத்தியது.
இன்று, இந்த சிறப்புமிகு முன்னோடித் திட்டத்தின் விளைவான பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் பராமரிப்பு இன்றி சிதைந்த நிலையில் உருக்குலைந்து கிடக்கின்றன என்பது வேதனைக்கும் கண்டனத்திற்கும் உரியதாகும். பெரியார் - அண்ணா பெயரை உச்சரித்துக் கொண்டுள்ள அ.இ.அ.தி.மு.க., அரசு இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி இருக்க வேண்டும்; ஏற்கனவே அமைக்கப்பட்ட இல்லங்களைச் சிறப்பாக பாதுகாத்து பராமரிக்க வேண்டும். ஆனால், கலைஞர் அரசு இதை உருவாக்கியது என்கிற காழ்ப்புணர்ச்சியோடு சமத்துவபுரங்களை தமிழக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அலட்சியப்படுத்தி வருகிறது.
பல இடங்களில் பெரியார் சிலைகள் சிதைந்து காணப்படுகின்றன. பூங்காக்கள் புதர்மண்டி காடுகளாக உருமாறி விட்டன. பேருந்து வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி முதலானவைகளும் இல்லாத நிலையில் சமத்துவபுரங்கள் இருக்கின்றன.
தமிழ்நாடு அரசு இதில் கவனம் செலுத்தி பெரியார் நினைவு சமத்துவபுரங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும். சிலைக்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை வண்ணம் தீட்டப்பட வேண்டும். பூங்காக்கள் நல்லவண்ணம் பராமரிக்கப்பட வேண்டும்.
பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் பழைய பொலிவுடன் திகழ்வதற்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின்மூலம் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
செய்தியாளர் : பொன் முகரியன்
கருத்துகள் இல்லை