பழநி மாரியம்மன் கோயில் தேர் ( 24.08..18) வெள்ளோட்டம் நடைபெற்றது.
பழநி மாரியம்மன் கோயிலுக்காக ரூ.18 லட்சத்தில் தயாரிக்கப்பட்ட புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. பழநி கிழக்கு ரதவீதியில் தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசித்திருவிழா விமரிசையாக நடைபெறும். இவ்விழாவுக்கு பழநி நகர், புறநகர் பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். இத்திருவிழாவின் போது தேரோட்டம் நடைபெறும். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை சிறிய தேர் ஒன்றில் மாரியம்மன் உலா வரும் நிகழ்ச்சி நடந்து வந்தது. தேர் பழுதடைந்ததால் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திர திருவிழாக்களுக்கு பயன்படுத்தப்படும் தேர்களின் மூலம் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
எனவே, மாரியம்மனுக்கு தனியாக தேர் வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் காரணமாக பழநி கோயில் நிர்வாகத்தின் சார்பில் புதிய தேர் செய்யும் பணி துவங்கியது. ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் செய்யப்பட்டது. வாகை மற்றும் இலுப்ப மரங்களின் மூலம் அழகிய வேலைப்பாடுகளுடன் புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. அலங்காரங்களுடன் தேர் 36 அடி உயரம் இருக்குமென கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தேரின் பிரதிஷ்டை மற்றும் வெள்ளோட்ட விழா இன்று நடைபெற்றது.
இதன் காரணமாக கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றனர். அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், புண்யாகவாசனம், அஸ்திர மந்திரஜபம், பஞ்சகவ்ய பூஜை, நூதன தேர் ஸ்தாபன பூஜை, சிறப்பு யாகம், கும்ப பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றனர்.
இத்தேர் சித்திரை திருவிழாவின்போது லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவிலும் பயன்படுத்தப்பட உள்ளது. ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்டோர் செய்தனர்.
செய்தியாளர் : பழனி - சரவணக்குமார்
செய்தியாளர் : பழனி - சரவணக்குமார்
கருத்துகள் இல்லை