Header Ads

  • சற்று முன்

    தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது - 24 மணி நேரம் பிறகு அறிக்கை காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் அறிவிப்பு


    தி.மு.க.தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், 24 மணி நேரத்திற்கு பின்னரே முன்னேற்றம் குறித்து கூற முடியும் என்றும், காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதிக்கு தொடர்ந்து 10வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
    இந்த நிலையில் மாலை ஆறரை மணிக்கு திமுக தலைவர் உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதில், முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறியுள்ளது. அவரது வயது மூப்பு காரணமாக முக்கிய உறுப்புக்களை தொடர்ந்து செயல்பட வைத்து பராமரிப்பது சவாலாக உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    தொடர்ந்து அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தீவிர மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் உடல்நிலை தரும் ஒத்துழைப்பைப் பொறுத்தே, எதையும் கணித்துக் கூற முடியும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சுமார் 10 நாட்களுக்குப் பிறகு, அவரது மனைவி தயாளு அம்மாள்  பிற்பகலில் முதல் முறையாக காவேரி மருத்துவமனைக்கு வந்து சென்றார். மு.க.ஸ்டாலின், கனிமொழி, ராஜாத்திஅம்மாள் உள்ளிட்ட குடும்பத்தினர் காலையில் வந்து சென்ற பின்னர் மாலையில்  மீண்டும் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர்.  

    முன்னதாக மருத்துவமனைக்கு வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், கருணாநிதியின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.  அதைத் தொடர்ந்து, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கவிஞர் வைரமுத்து, தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதிஷ், இடதுசாரி கட்சி தலைவர்கள் ஆகியோர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்தனர்.

    மத்திய அமைச்சர் நிதின்கட்காரி காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து குடும்பத்தினரிடம் விசாரித்தார்.

    கருணாநிதி உடல் நிலை குறித்து தகவல் அறிந்த திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு திரண்டனர். பலர் துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டு கதறினர்.

    கவலை தோய்ந்த முகத்துடன் கட்சிக் கொடியைக் கையில் ஏந்தி நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேரம் அதிகமாக அதிகமாக தொண்டர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் காவேரி  மருத்துவமனைக்கு முன்பாக உள்ள சாலையில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டு வேறு வழியில் மாற்றப்பட்டுள்ளது.

    இதனிடையே இரவு பத்தேகால் மணியளவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.  தொடர்ந்து கனிமொழி தனது குடும்பத்தினருடன் புறப்பட்டுச் சென்றார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad