Header Ads

  • சற்று முன்

    IPL போட்டியை கண்டித்து அனைத்து கட்சியினர், அமைப்பினர் அண்ணா சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்து பல மணி நேரமாக நடைபெற்ற போராட்டங்களால் சென்னை அண்ணா சாலை போராட்டக் களமானது. 
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பல்வேறு அமைப்பினர், கட்சியினர் ஒரே நேரத்தில் போராட்டத்தில் குதித்தனர்.  போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி உள்ள சாலைகளில்  திரண்ட போராட்டக்காரர்கள் ஆங்காங்கே முழக்கங்களை எழுப்பியும், தங்கள் அமைப்புகளின் கொடிகளை ஏந்தியும் போராட்டத்தை தொடங்கினர்.
    இந்நிலையில், மாலை 4 மணி முதலே அண்ணாசாலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தமிழ் அமைப்பினர் திரளத் தொடங்கினர். தமிழர் பண்பாட்டு கலை இலக்கிய பேரவை சார்பில் இயக்குநர் பாரதி ராஜா தலைமையில் ஏராளமானோர் திரண்டனர். கவிஞர் வைரமுத்து, சீமான், தமிமுன் அன்சாரி, தனியரசு, இயக்குநர் கவுதமன் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.தமிழர் வாழ்வுரிமைக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஆதரவாளர்களும் பேரணியாக அணிவகுத்து வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்திய போது தள்ளு முள்ளு ஏற்பட்டது.
    வாலாஜா சாலை சந்திப்பு அருகே பேரணியாக வந்தவர்களை போலீஸார் தடுத்து நிறுத்த முயன்ற போது சிலர் போலீஸாரை தாக்கினர். இதனையடுத்து பேரணியாகச் சென்றவர்கள் வாலாஜா சாலையில் முன்னேறத் தொடங்கினர். திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே போராட்டக்காரர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.அங்கிருந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு செல்ல முயன்ற இயக்குநர்கள் அமீர், கவுதமன்  மனிதநேய ஜனநாயக கட்சியின்  தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர். 
    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர் பாரதிராஜா, தங்கர்பச்சான் உள்ளிட்டோரையும் போலீஸார் கைது செய்தனர்.
    கைது செய்யப்படாதவர்கள் ஆங்காங்கே குழுக்களாக நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனிடையே கிரிக்கெட் ரசிகர்கள் போன்று சேப்பாக்கம் மைதானத்தினருகே சென்ற சிலர் திடீர் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சிக்களை அணிந்த ரசிகர்களை சிலர் தாக்கியதாக புகார் தெரிவித்தனர். 
    சேப்பாக்கம் மைதானம் அருகில் உள்ள விக்டோரியா விடுதி அருகே ரஜினி படத்துடன் கூடிய ஏராளமான கருப்பு பேட்ஜ்களுடன் வந்த ரஜினி ரசிகர்கள், மைதானத்துக்குள் செல்பவர்களிடம் கொடுத்து அதனை அணிந்து கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.  திருவல்லிக்கேணி ரயில் நிலையத்திலிருந்து பயணிகளோடு பயணிகளாக வந்த தமிழக வாழ்வுரிமை கட்சியினர், திடீரென மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டவாறு சேப்பாக்கம் மைதானத்தின் முதல் நுழைவு வாயிலுக்கு பூட்டுபோட முயன்றனர்.
    இந்நிலையில் சென்னை வாலாஜா சாலை , அண்ணாசாலை- வாலாஜா சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் போராட்டத்தில் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் பிரதமர் மோடியின் கொடும்பாவியை கொளுத்தி முழக்க மிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பல மணி நேரமாக தொடர்ந்த போராட்டம் காரணமாக சென்னையின் முக்கிய சாலையான அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணா சாலைகளுக்கு செல்லும் இணைப்பு சாலைகள், துணை சாலைகளிலும் வாகனங்கள் தேங்கியதால் மக்கள் அவதிக்கு உள்ளானார்கள். 
    மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணிக்கு பின்னரும் நீடித்த போராட்டத்தால் சென்னை அண்ணா சாலை, வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad