Header Ads

  • சற்று முன்

    காதலர்களைக் கொன்றவருக்குத் தூக்குத்தண்டனை! தேனி நீதிமன்றத்தின் முதல் அதிரடி தீர்ப்பு



    தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி. சுற்றுலாத் தலமாக விளங்கும் இந்த அருவியில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தேனி மாவட்டத்தில் யாரும் மறந்திருக்க முடியாது. காதலர்களான கல்லூரி மாணவி கஸ்தூரி மற்றும் எழில் முதல்வன் ஆகியோர், சுருளி அருவியிலிருந்து கைலாசநாதர் குகைக் கோயிலுக்குச் செல்லும் காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் இறந்துகிடந்தனர். முதலில், அவர்களின் இறப்பை தற்கொலை என்று சொல்லி போலீஸார் வழக்கை முடிக்க நினைத்தனர்.

    அப்போது கம்பம் பகுதி பத்திரிகையாளர்கள், இவர்களின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி தொடர்ந்து செய்தி வெளியிட்டனர். அதன் விளைவாக மூன்று தனிப்படைகள் அமைத்த போலீஸாரின் தீவிர விசாரணையிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அதைத்தொடர்ந்து எழில் முதல்வன் தரப்பில் எடுக்கப்பட்ட முயற்சியால் வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. அவர்களின் விசாரணையில், கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த திவாகர் என்ற கட்டவெள்ளை என்பவர் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், காதலர்கள் இருவரும் காட்டுக்குள் தனிமையில் இருந்தபோது அவர்களை மிரட்டி பணம் கேட்டிருக்கிறார் திவாகர்.

    பணம் கொடுத்த பின்னர்,  கஸ்தூரியைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்திருக்கிறார் திவாகர். அதை எழில் முதல்வன் தடுக்க அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு, தப்பிக்க முயற்சி செய்த கஸ்தூரியை காலில் வெட்டியுள்ளார். கீழே விழுந்தவரின் முதுகில் வெட்டி,  ரத்தவெள்ளத்தில் கிடந்த கஸ்தூரியைக் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் திவாகர். இறுதியில் கஸ்தூரியைக் கொலை செய்துவிட்டு தப்பித்திருக்கிறார். கைது செய்யப்பட்ட திவாகர், சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த எட்டு வருடங்களாக நடைபெற்று வந்த இந்தக் கொலை வழக்கு விசாரணைகள் அனைத்தும் முடிந்த நிலையில், இன்று தேனி மாவட்ட அமர்வு  நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமரேசன், திவாகர் என்ற கட்டவெள்ளை குற்றவாளி என அறிவித்ததோடு,7வருட கடுங்காவல் தண்டனையும் ஓர் ஆயுள் தண்டனை மற்றும் தூக்குத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

    மதுரை மாவட்டத்தில் இருந்த தேனி கடந்த 1996-ம் ஆண்டு பிரிக்கப்பட்டது. இதையடுத்து 2006-ல் தேனியில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நீதிமன்றம் அமைந்து தற்போது முதன் முறையாகத் தூக்குத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad