காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் மினிவேன் பேருந்து மோதி விபத்து !
காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் மினி வேன் மீது தனியார் பேருந்து மோதியதில் 8 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். 15 பேர் பலத்த காயமடைந்தனர்.
வேலூர் மாவட்டம், நெமிலி வட்டம், சிறுணமல்லி கிராமத்தைச் சேர்ந்த 24 பேர், தங்கள் உறவினரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக மினிவேன் ஒன்றில் காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் அம்பேத்கர் காலனி பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை மதியம் புறப்பட்டுச் சென்றனர். இந்த, மினிவேனை சிறுணமல்லியைச் சேர்ந்த முத்து (50) ஓட்டி வந்தார். அதில் 16 பெண்கள், 2 குழந்தைகள், 6 ஆண்கள் என மொத்தம் 24 பேர் பயணம் செய்தனர். பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தாமல் நோக்கி மினிவேன் பிற்பகல் 2.20மணிக்கு வந்தது. அப்போது, ஒரகடத்திலிருந்து ராணிப்பேட்டை நோக்கி வந்த தனியார் பேருந்து, மினி வேனின் இடதுபுறம் மோதியது. இதில், வேன் 3 முறை உருண்டு நின்றது. இந்த விபத்தில், வேனில் இருந்த சிறுணமல்லி பகுதியைச் சேர்ந்த பரிமளம் (45), பஞ்சமி (50), துலுக்கானம் (50), முத்தம்மாள் (60), ராஜிகன்னி (50), இந்திரா (40), சுமித்ரா (45) ஆகிய 7 பெண்கள் மற்றும் அளவத்தன் (50) ஆகிய 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாலுசெட்டி சத்திரம் போலீஸார், உயிரிழந்தவர்களின் சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளிலிருந்து 4 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, பலத்த காயம் அடைந்த 16 பேர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், வழியிலேயே சின்ன பொண்ணு இறந்தார். இதை யடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 -ஆக உயர்ந்தது. ஆத்திரமடைந்த கிராமத்தினர் தனியார் நிறுவன பேருந்து கண்ணாடிகளை உடைத்தனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதிக்கு வந்த போலீஸார் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் நின்று போக்குவரத்தை சரி செய்தனர். சம்பவ இடத்தை காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி நேரில் விசாரணை நடத்தினார். இந்த விபத்து குறித்து பாலுசெட்டிசத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை