• சற்று முன்

    திருவெற்றியூர் அரசு கலைக் கல்லூரி இடிந்து விழும் அபாயம்


    திருவொற்றியூர் அரசு கலைக் கல்லூரி அடிப்படை வசதிகள் இல்லாத மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக் கட்டடத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுவதால் மாணவர்களும், ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
    2011-ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றதும், திருவொற்றியூர் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்தார். இதனால் திருவொற்றியூர் நகராட்சி நடுநிலைப் பள்ளி கட்டடத்தில் தாற்காலிகமாக 2012 ஆகஸ்டு மாதம் சென்னைப் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியாக அரசு கல்லூரியை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அத்துடன் எர்ணாவூர் மேம்பாலம் அருகே கல்லூரி அமைக்க முடிவெடுக்கப்பட்டு கட்டடங்கள் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. ஆனால் 6 ஆண்டுகளைக் கடந்தும் கல்லூரிக்கான நிரந்தர கட்டடங்கள் அமைக்கப்படவில்லை.சுமார் 250 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இக்கல்லூரியில் தற்போது இளங்கலை, அறிவியல், வணிகவியல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 
    தரைத்தளம் மட்டுமே கொண்ட இரு கட்டடங்களில் வகுப்புகளும், இரு சிறிய கட்டடங்களில் கல்லூரி முதல்வர், விரிவுரையாளர்கள் அறை, அலுவலகம் உள்ளிட்டவையும் செயல்படுகின்றன. போதிய கட்டடங்கள் இல்லாததால் காலை, மாலை என இரு நேரங்களில் கல்லூரி இயங்கி வருகிறது.
    சீர்கெட்டுள்ள தாற்காலிக கட்டடங்கள்: இங்கு கல்லூரி செயல்படுவதற்கான எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. மேலும் கல்லூரி செயல்பட்டுவரும் தாற்காலிக கட்டடங்களின் மேற்கூரை காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளன. இதனால் எந்த நேரத்திலும் கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றன. மாணவ, மாணவியருக்கென தனிக்கழிப்பிட வசதிகள் ஏதும் இல்லை.
    புதிய கட்டடங்கள் இல்லாததால் இதர பிரிவுகளில் கூடுதல் வகுப்புகள் தொடங்குவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் அறிவியல் ஆய்வகங்கள் இல்லாததால் அறிவியல் பட்ட வகுப்புகள் தொடங்க இயலாத நிலை உள்ளது. அத்துடன் கல்லூரிக்கு அவசியமான நூலகம் இல்லை. 
    நிலம் கையகப்படுத்துவதில் தாமதம்: திருவொற்றியூர் பல்கலை உறுப்புக் கல்லூரி நிரந்தர கட்டடம் கட்ட ரூ. 8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு எர்ணாவூரில் உள்ள காலியிடத்தில் அடிக்கல் நாட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து கட்டடப் பணிகள் தொடங்குவதில் தடை ஏற்பட்டது.
    கனிமவளத் துறை இடம் சரியான தேர்வு: இதுகுறித்து திருவொற்றியூர் பொது வர்த்தக சங்கத்தின் கெளரவத் தலைவர் தொழிலதிபர் ஜி.வரதராஜன் கூறியது:
    கல்லூரி கட்டுவதற்கு முதலில் தேர்வு செய்யப்பட்ட கனிம வளத்துறைக்குச் சொந்தமான இடம் சரியானத் தேர்வு. கல்லூரிக்கான நிதியாதாரம், ஒப்புதல்கள் அனைத்தும் தயார் நிலையில் இருந்தும், மக்களின் விருப்பத்துக்கு மாறாக கனிமவள நிறுவன உயர் அதிகாரிகள் செயல்படுகின்றனர். எனவே அனைத்தும் ஒரே இடத்தில் அமைக்க இந்த இடத்தை தமிழக அரசு கையகப்படுத்தி ஒப்படைக்க வேண்டும் என்றார் வரதராஜன்.

    அமைச்சர் கே.பி.அன்பழகன் விளக்கம்: இதுகுறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியது: ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் கட்டடம் கட்டப்படாத ஒரே கல்லூரி இது மட்டுமே. இடத்தை கையகப்படுத்தி ஒப்படைப்பது மாவட்ட நிர்வாகத்தின் கடமை. முதலில் தேர்வு செய்யப்பட்ட இடம்தான் சரியான இடம். ஆனால் இதை அளிப்பதில் தமிழ்நாடு கனிமவள நிறுவனம் பிடிவாதமாக மறுத்து வருகிறது. இதனால் தற்போது இயங்கி வரும் இடத்திலேயே புதிய கட்டடங்களைக் கட்ட முடிவு செய்யப்பட்டது. 
    ஆனால் இங்கு பள்ளி மற்றும் விளையாட்டு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருவதால் இதற்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இக்கல்லூரிக்கு தேவைப்படும் நிலத்தைப் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் நேரடியாகப் பேசி இப்பிரச்னைக்குத் தீர்வு காண நிச்சயம் முயற்சி எடுப்பேன் என்றார் .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad