தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பதினெட்டுப் பேரின் சட்டமன்றப் பதவி பறிப்பு தீர்ப்பு விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வர உள்ளது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகு தமிழக அரசியல் களத்தில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. தீர்ப்புக்குப் பிறகு எடப்பாடி அரசு கவிழ்ந்து தனது ஆதரவில்தான் புதிய அரசு அமையும் என்று உறுதியாக நம்புகிறார் தினகரன். தனது அணியிலிருந்து ஒருவரை முதல்வராகவும் அவர் இப்போது தேர்வு செய்துவிட்டார் என்ற தகவல் தினகரன் அணியில் பலமாக ஒலிக்கிறது.
எடப்பாடி ஆட்சிக்கு எதிராகவும் மாவட்ட வாரியாக தனது செல்வாக்கை பலப்படுத்தவும் தினகரன், மக்கள் புரட்சி பயணத்தை தற்போது மேற்கொண்டு வருகிறார். பல இடங்களில் தினகரனுக்குக் கிடைத்துவரும் வரவேற்பு அவருக்கு உத்வேகத்தை கொடுத்து வருகிறது. அதே நேரம், தினகரனுக்கு மக்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பு ஆளும் அ.தி.மு.க-வினரையும் யோசிக்க வைத்துள்ளது. குறிப்பாக சசிகலா ஆதரவு பெற்ற அமைச்சர்கள் பலரும் தினகரன் தரப்பிடம் சத்தமில்லாமல் தூது அனுப்பி வருகிறார்கள். இந்த நிலையில், ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இடையே இடைவெளி அதிகரித்து வருவதால், விரைவில் கட்சிக்குள் பூகம்பம் வெடிக்கும் என்று சில அமைச்சர் ஓப்பனாகவே சொல்லியுள்ளார்கள்.
இந்தநிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பதினெட்டுப் பேர் தகுதி நீக்கம் செய்யபட்ட வழக்கின் தீர்ப்பு விரைவில் வர உள்ளது. அதோடு, தி.மு.க கொறடா சக்கரபாணி தொடர்ந்த பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் வழக்கும் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த இரண்டு வழக்கின் தீர்ப்பை பொறுத்தே எடப்பாடி அரசின் ஆயுட்காலம் உள்ளது. தற்போது உள்ள நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தீர்ப்பு தினகரனுக்கு சாதகமாக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சட்டவல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். தினகரன் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் அதே நேரம், ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்கின் தீர்ப்பு பாதகமாக வந்துவிடும் என்கிற பயம் அங்கு நிலவுகிறது. குறிப்பாக ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் விசயத்தில் அரசு தரப்பு வழக்கறிஞரின் செயல்பாடு திருப்தி இல்லாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் ஓ.பி.எஸ் அதிருப்தில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இதையெல்லாம், அறிந்து தான் தினகரன் மக்கள் சந்திப்பை தீவிரப்படுத்தியுள்ளார் என்கிறார்கள்.
இந்த இரண்டு தீர்ப்புகளுக்குப் பிறகு சட்டபேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துவிடும் முடிவில் தினகரன் தரப்பு தயாராக இருக்கிறது என்று சொல்கிறார்கள். தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக வந்துவிட்டால், எடப்பாடி அணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தன்பின்னால் வருவதை யாராலும் தடுக்க முடியாது என்று தினகரன் கருதுகிறார். அதற்காக தான், தனிக்கட்சி திட்டத்தையும் அவர் தள்ளி வைத்துள்ளார் என்கிறார்கள். சட்டபேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து எடப்பாடி ஆட்சியை வீழ்த்தி தனது ஆட்சியைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று திட்டமிடுகிறார் தினகரன்
கருத்துகள் இல்லை