• சற்று முன்

    எதிரிகளை தீர்த்துக்கட்ட பிறந்தநாள் விழா ஏற்பாடு !!! போலீஸ் வளைத்து பிடித்தது ....


    பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரெüடிகள், சென்னை அருகே செவ்வாய்க்கிழமை இரவு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, போலீஸாரால் அதிரடியாக துப்பாக்கி முனையில் சுற்றி வளைக்கப்பட்டு 75 பேர் கைது செய்யப்பட்டனர். சினிமா பாணியிலான இந்த அதிரடி நடவடிக்கையின்போது தப்பியோடி தலைமறைவான ரெüடிகளை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    சென்னை பள்ளிக்கரணை பகுதியில், வேளச்சேரி பிரதான சாலையில் போலீஸார் செவ்வாய்க்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு இளைஞரிடம் விசாரணை நடத்தினர். அந்த ரெüடி பல்லு மதன் என்பதும், அவர் வண்டலூர் அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை, வடக்கு மலையம்பாக்கத்தில் வேலு என்பவருக்கு சொந்தமான வாகனப் பழுது நீக்கும் மையத்துக்கு செல்வதும் தெரிய வந்தது.
    பிறந்த நாள் கொண்டாட்டம்:அந்த மையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு , சூளைமேட்டைச் சேர்ந்த ரௌடி பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறவுள்ளதும், அந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்க பல்லு மதனை போல், சென்னையைச் சேர்ந்த தேடப்படும் ரௌடிகள் பலர் கலந்து கொள்ள உள்ளதும் தெரிய வந்தது. ரௌடி பினு, கொலை வழக்குத் தொடர்பாக தேடப்பட்டு வருபவர் என்பதால் போலீஸார் உஷாராயினர்.
    காவல் ஆணையர் உத்தரவு: இதையடுத்து, பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து,, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதனுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த காவல் ஆணையர், அம்பத்தூர் காவல் துணை ஆணையர் சர்வேஸ்ராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து, பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபடும் ரௌடிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.
    இதையடுத்து சர்வேஸ்ராஜ் தலைமையில் உதவி காவல் ஆணையர்கள் கண்ணன், நந்தகுமார் மற்றும் 10 காவல் ஆய்வாளர்கள் உள்பட 50 போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு ரௌடிகளை சுற்றி வளைத்துப் பிடிக்க தயாராயினர். காவல் துறை வாகனத்தில் சென்றால் ரெüடிகள் அனைவரும் தப்பிவிடலாம் என்பதால் வாடகைக் கார்களில் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
    மின் விளக்கில் ஜொலித்த விழா அரங்கம்: ரௌடி பினுவின் பிறந்த நாள் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மையத்தில், திருமண விழாவை போன்று அலங்கார மின் விளக்குகள், மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. பிறந்தநாள் விருந்துக்காக அசைவ உணவு வகைகள் தயார் செய்யப்பட்டிருந்தன. அத்துடன் மதுபானங்களும் பரிமாறப்படுவதை போலீஸார் அறிந்தனர். விழாவுக்கு வரும் அழைப்பாளர்கள் அடையாளம் காண ரெüடிகள் பட்டாசுகளை வெடித்துள்ளனர். இதனால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது ரெüடி பினு, அரிவாளால் கேக் வெட்டியுள்ளார். இச்சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்த போலீஸார் அப்பகுதியை உடனடியாக சுற்றி வளைத்தனர்.
    பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த ரெüடிகள், துப்பாக்கி முனையில் தாங்கள் போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்து தப்பியோடினர். இதில் ஒரு சிலர் தப்பியோடி வடக்கு மலையம்பாக்கம் ஊருக்குள் தலைமறைவாயினர். 
    போலீஸாருடன் கைகோர்த்த கிராம மக்கள்: போலீஸார் கிராமத்துக்குள் ரெüடிகளைத் தேடி வந்ததை அறிந்த கிராம மக்கள் அவர்களுக்கு உதவியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். குடிசை வீடுகளின் பின்பகுதிகளில் பதுங்கியிருந்த ரெüடிகளை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். சில ரெüடிகள் வேறு வழியின்றி போலீஸாரிடம் சரணடைந்தனர்.
    பினுவின் ஆதரவாளர்கள் கைது: சினிமா பாணியிலான இந்த அதிரடி வேட்டையில் முக்கிய ரௌடிகளான பினு, அவரது கூட்டாளிகள் கனகு (எ) கனகராஜ், விக்கி (எ) விக்னேஷ் ஆகிய 3 பேரும் தலைமறைவாயினர். இருப்பினும், பினுவின் ஆதரவாளர்களான கென்னடி, மாட்டு சங்கர், ரத்தினம், சித்தார்த், அந்தோனி (எ) டென்னிஸ், ஹரிசேகர், சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதும் கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவர்கள் உள்பட 75 ரௌடிகளை போலீஸார் கைது செய்தனர். 
    ஆயுதங்கள் பறிமுதல்: இதுதொடர்பாக மேற்கு மண்டல இணை ஆணையர் சந்தோஷ்குமார் கூறியது: இந்த அதிரடி நடவடிக்கையில் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இவ்வளவு ரௌடிகளை மொத்தமாக கைது செய்வது இதுவே முதன்முறை. அவர்களிடமிருந்து 45 மோட்டார் சைக்கிள்கள், 7 கார்கள், ஒரு ஆட்டோ, 88 செல்லிடப்பேசிகள், 30 கத்திகள், அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
    20 பேர் கல்லூரி மாணவர்கள்: போலீஸார் ரெüடிகளைச் சுற்றி வளைத்தபோது, 20 ரெüடிகள் தப்பியோடியுள்ளது தெரிய வந்துள்ளது. இவர்களில் பிரபல நடிகை ஒருவரின் சகோதரரும் அடங்கியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட ரௌடிகளில் 47 பேர் போரூர் எஸ்.ஆர்.எம்.சி. காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர். பிற ரௌடிகள் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர். 
    பின்னர் ஒவ்வொரு ரௌடிக்கும் எந்தெந்த காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்ற தகவல் சேகரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். கைது செய்யப்பட்ட ரெüடிகளில் 20 பேர் கல்லூரி மாணவர்கள் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.


    எதிரிகளை தீர்த்துக்கட்ட பிறந்தநாள் விழா ஏற்பாடு
    தன்னை கொலை செய்ய முயன்ற அண்ணா நகரைச் சேர்ந்த ரௌடியிடமும், தன்னிடம் பகைமை பாராட்டி வரும் தேனாம்பேட்டை ரௌடியிடமும் பினு நட்புடன் இருப்பதுபோல் நாடகமாடியுள்ளார். பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு அவர்களை வரவழைத்து கொல்வதற்கு பினுவும், அவரது ஆதரவாளர்களும் திட்டம் தீட்டியுள்ளனர். இத்திட்டம் நிறை
    வேறுவதற்கு முன்பே போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்ததால், பினுவின் திட்டம் தோல்வி அடைந்தது.

    போலி அடையாள அட்டை மூலம் தப்ப முயன்ற ரௌடிகள்

    புளியந்தோப்பைச் சேர்ந்த சரவணன் ஏற்பாட்டின் பேரில், வடக்கு மலையம்பாக்கத்தில் வேலு என்பவருக்கு சொந்தமான வாகனங்கள் பழுது நீக்கும் மையத்தில் ரௌடி பினுவுக்கு பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    இந்நிலையில், போலீஸார் சுற்றி வளைத்தபோது ரெüடி சரவணன், தன்னிடமிருந்த ஒரு பத்திரிகையாளர் அடையாள அட்டையை போலீஸாரிடம் காட்டி தப்பிக்க முயன்றுள்ளார். அதை போலீஸார் ஆய்வு செய்ததில், அது போலி அடையாள அட்டை என்பதும், சரவணன் மீது கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு பதிவாகியிருப்பதும் தெரியவந்தது. சரவணன், வழக்குரைஞர் அடையாள அட்டையும் வைத்திருந்தார். ஆந்திர மாநில வழக்குரைஞர் சங்கத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளதாக போலீஸாரிடம் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சில ரௌடிகளும், போலி பத்திரிகையாளர் அடையாள அட்டை, வழக்குரைஞர் அடையாள அட்டை மூலம் தப்ப முயன்றுள்ளனர்.


    ரௌடியாக மாறிய காரத்தே மாஸ்டர்

    கேரள மாநிலத்தைச் சேர்ந்த பினு, தற்போது சென்னை சூளைமேட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது தாயார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சூளைமேட்டில் முதலில் கராத்தே மாஸ்டராகவே பினு இருந்து வந்திருக்கிறார். பின்னர் அவரது தவறான நட்பினாலும், சமூகவிரோத நடவடிக்கையாலும் ரௌடியாக மாறியிருக்கிறார். 2000 -ஆம் ஆண்டிலிருந்து சூளைமேடு, அரும்பாக்கம், கோயம்பேடு பகுதிகளில் இவரது ரெüடி செல்வாக்கு இருந்து வருவதாக காவல்துறையினர் கூறுகின்றனர். பினுவின் மீது 4 கொலை வழக்குகள் உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.  இவரது கூட்டாளியான அண்ணா நகரைச் சேரந்த ராதாகிருஷ்ணன், பினுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனித்து செயல்படத் தொடங்கியுள்ளார்.  

    இதனால் இருவருக்கும் விரோதம் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு பினுவின் பிறந்த நாளை அவரது ஆதரவாளர்கள், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் கொண்டாடியுள்ளனர். அப்போது பினுவை சிலர் கொலை செய்ய முயன்றதால், அந்த விழா பாதியில் கைவிடப்பட்டது. சென்னை போலீஸாரால் தேடப்பட்டு வரும் "டாப் 10 ரௌடிகள்' பட்டியலில் பினுவின் பெயரும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad