கல்பாக்கம் அருகே தேவாலயத்தில் பாதிரியார் மர்ம சாவு: 3வது நாளாக உடலை வாங்க மறுத்து அரசியல் கட்சியினர் சாலை மறியல்
சென்னை: பாதிரியார் மர்ம சாவில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி, சக பாதிரியார்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் பாதிரியாரின் உடலை வாங்க மறுத்து 3வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கல்பாக்கம் அடுத்த காத்தங்கரையில் 20ம் தேதி கீதியோன் என்ற பாதிரியார் சர்ச்சில் மர்மமான முறையில் தூக்குப்போட்டு இறந்தார். இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், பாதிரியாரை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்து தூக்கில் மாட்டிவிட்டதாகவும் அவர்களை கைது செய்ய வலியுறுத்தி, பாதிரியாரின் சடலத்தை வாங்காமல் பல்வேறு கிறிஸ்துவ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று, 3வது நாளாக சடலத்தை வாங்க மறுத்து கிறிஸ்துவ அமைப்பினர், புரட்சிபாரதம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் என நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் மதுராந்தகம் செங்கல்பட்டு சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த செங்கல்பட்டு டிஎஸ்பி மதிவானன் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் கடும் வாக்குவாதம் முற்றி, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நேற்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்து சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பாதிரியார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். 3 நாள் தொடர் போராட்டம் காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, அடையாளச்சேரி ஆகிய பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து டிஎஸ்பி மதிவானன் கூறுகையில், ‘‘கிறிஸ்துவர்கள் வைக்கும் நிபந்தனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அரசு மருத்துவர்கள் தான் உடல் கூறு ஆய்வு செய்வார்கள். தனியார் மருத்துவர்கள் அனுமதிக்க முடியாது. அரசு டாக்டர்கள் உடற்கூறு செய்வதை வீடியோ பதிவு செய்யப்படும். உடல் கூறு ஆய்வில் கொலைக்கான காரணங்கள் தெரியவந்தால் கொலை வழக்காக மாற்றப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள்’’ என்றார்.
கருத்துகள் இல்லை