மதுரவாயல் கூவம் ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்பு வீடுகளை அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
சென்னை பூந்தமல்லி மழைக்காலங்களில் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்து விடுகிறது. இதையடுத்து சென்னை முழுவதும் கூவம் ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி மதுரவாயல் பகுதியில் கூவம் ஆற்றங்கரையோரம் உள்ள கம்பர் நகரில் 92 வீடுகள், பெருமாள் கோவில்தெரு, நாகாத்தம்மன் நகர் பகுதிகளில் 28 வீடுகள் என மொத்தம் 120 வீடுகளை அகற்றுவதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பாளர்களுக்கு முறைப்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது.இவர்களுக்கு பெரும்பாக்கத்தில் மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் 11-வது மண்டல உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சம்பவ இடத்துக்கு சென்றனர். 120 வீடுகளில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை வீடுகளை காலி செய்து விட்டு, பெரும்பாக்கத்தில் உள்ள மாற்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளில் இருந்து பொருட்களை காலி செய்து எடுத்து செல்ல அரசு சார்பில் வாகன ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் வீட்டில் உள்ள பொருட்களை அந்த வாகனங்களில் ஏற்றி பெரும்பாக்கத்துக்கு கொண்டு சென்றனர். ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாக்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் சேருவதற்கான மாற்று ஏற்பாடுகள், ரேஷன் கார்டு மாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்து உள்ளனர்.
ஆனால் சில ஆக்கிரமிப்பாளர்கள் தங்களுக்கு பெரும்பாக்கத்தில் வீடு ஒதுக்கியதற்கு பதிலாக படப்பை பகுதியில் வீடுகளை ஒதுக்கி தர வேண்டும் என்று கூறி, வீடுகளை காலி செய்ய மறுத்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
நாங்கள் பல ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறோம். இந்த வீட்டை காலி செய்யும்போது தாம்பரம் அடுத்த படப்பை பகுதியில் கட்டப்பட்ட வீடுகளை எங்களுக்கு ஒதுக்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தற்போது பெரும்பாக்கம் பகுதியில் வீடுகளை ஒதுக்கி இருப்பதாக தெரிவிக்கின்றனர்.நாங்கள் அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேலை செய்து வருகிறோம். பெரும்பாக்கம் சென்றால் தினமும் அங்கிருந்து வேலைக்கு சென்று வருவதில் சிரமம் ஏற்படும். எனவே எங்களுக்கு படப்பை அல்லது கூடப்பாக்கம் பகுதியில் வீடுகள் ஒதுக்கி தர வேண்டும். இல்லை என்றால் வீடுகளை காலி செய்ய மாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அவர்களிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர். ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரும் வீடுகளை காலி செய்த பிறகு 120 ஆக்கிரமிப்பு வீடுகளும் இடித்து அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை