ஆளுநர் உரையுடன் கூட்ட தொடர் துவங்கியது
சென்னை : சட்டசபை வளாகத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினும், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. தினகரனும் சந்தித்துக்கொண்டனர். தினகரனுக்கு திமுக எம்.எல்.ஏக்கள் கை குலுக்கி வாழ்த்தும் தெரிவித்தனர். 2018ம் ஆண்டிற்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி துவக்கி வைத்தார். இதில் ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கி வெற்றி பெற்ற டி.டி.வி தினகரன் கலந்து கொண்டார்.
இவருக்கு எதிர்கட்சி வரிசையில் 148ம் எண் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. கூட்டத்தொடர் ஆரம்பித்ததும் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். ஆனால், டி.டி.வி தினகரன் ஆளுநர் உரை முடியும் வரை உள்ளேயே இருந்தார். முன்னதாக சட்டசபைக்கு வந்த டி.டி.வி தினகரனும், எதிர்கட்சி தலைவரான ஸ்டாலின் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். தினகரனுக்கு திமுக எம்.எல்.ஏக்கள் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், கே.என்.நேரு ஆகியோர் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். தினகரன் சிரித்துக்கொண்டே அவர்களுக்கு நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை