Header Ads

  • சற்று முன்

    தமிழகம் முழுவதும் வரும் 27தேதி திமுகவினர் ஆர்பாட்டம் அறிவிப்பு



    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை
    தி.மு.க. ஆட்சியில் மாநகர பேருந்துகளில் 2 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச கட்டணம் 2011 அ.தி.மு.க. ஆட்சியில் 3 ரூபாயாக உயர்த்தப்பட்டு, இப்போது 5 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது. அதேபோல், மாநகர பேருந்துகளில் 12 ரூபாயாக இருந்த அதிகபட்ச கட்டணம் இன்றைக்கு 23 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சாமான்ய மக்கள், சில்லரை வியாபாரிகள், கோயம்பேடு உள்ளிட்ட வணிக வளாகங்களுக்கு செல்வோர் பயன்படுத்தும் பேருந்து கட்டணத்தை கடுமையாக உயர்த்தியிருக்கிறது அ.தி.மு.க. அரசு.மாநகரில் ஓடும் அனைத்து வகை பேருந்துகளின் கட்டண உயர்வுகளையும் பார்த்தால், தற்போது உள்ள கட்டணத்திற்கும், அதிகரிக்கப்பட்டுள்ள கட்டணத்திற்கும் பத்து ரூபாய் முதல் 60 ரூபாய் வரை கூடுதலாகி இருக்கிறது. குறிப்பாக, ஐ.டி. ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோர் பயன்படுத்தும் ஏ.சி. பேருந்துகளின் கட்டணம் 90 ரூபாயிருந்து 140 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.மாநில அளவில் இயக்கப்படும் பேருந்துகளின் கட்டண உயர்வும் பயணிகளின் முதுகெலும்பை முற்றிலும் முறித்துப்போடும் விதமாக உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண பேருந்துகளின் கட்டணம் குறைந்தபட்சமாக 5 ரூபாய் என்ற அளவில் இருந்து 6 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.இதேபோல், விரைவுப் பேருந்து கட்டணம், அதி சொகுசு பேருந்து, இடைநில்லா பேருந்து, புறவழிச்சாலை இயக்கப் பேருந்துகள் எல்லாவற்றிலும் அ.தி.மு.க. ஆட்சியில் நடக்கும் டெண்டர் ஊழல்களுக்கு பணம் சேகரிக்கும் உள்நோக்குடன், சகட்டுமேனிக்கு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
    மக்களுக்காக நடக்கும் ஆட்சி அல்ல…

    சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்ல 235 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 372 ரூபாயாகவும், குளிர் சாதன பேருந்துகளில் 496 ரூபாயாகவும் உயர்ந்து விட்டது. அதே போல் மதுரைக்கு செல்லும் கட்டணம் 325 ரூபாயிலிருந்து 515 ரூபாயாகவும், திருநெல்வேலிக்கு 695 ரூபாயாகவும் உயர்ந்து விட்டது. நாகர்கோவிலுக்கு செல்லும் கட்டணம் 778 ரூபாயாகவும், கோவைக்கு 571 ரூபாயாகவும், தஞ்சாவூருக்கு 439 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இந்த அதிரடி கட்டண உயர்வால் சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் கட்டணம் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் குறைந்த பட்சம் 372 ஆகவும், அதிகபட்சமாக 778 ரூபாயும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குளிர் சாதனப் பேருந்துகளிலோ குறைந்த கட்டணம் 496 ரூபாயாகவும், அதிக பட்ச கட்டணம் 1,038 ரூபாயாகவும் உயர்த்தி, அரசு பேருந்துகளின் கட்டணங்கள் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்களாக மாற்றப்பட்டுள்ள கொடுமை நடைபெற்றுள்ளது. தி.மு.க. ஆட்சியில் டீசல் விலை உயர்ந்த போது கூட ஐந்து வருடம் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால் 2015 முதல் சர்வதேச சந்தையில் டீசல் விலை குறைந்து வருகின்ற நிலையில், இப்படியொரு விஷம் போன்ற கட்டண உயர்வை அறிவித்திருப்பதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. அ.தி.மு.க. அரசும், அதன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மக்களின் தலையில் தாராளமாக பேருந்து கட்டணப் பேரிடியை இறக்கியிருப்பது இந்த ஆட்சி மக்களுக்காக நடப்பதல்ல, கமிஷனுக்காக மட்டுமே நடக்கும் ஆட்சி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து அறிவித்துக்கொண்டிருக்கிறது.
    திரும்ப பெற வேண்டும்

    சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நூறு சதவீத சம்பள உயர்வு, அரசு துறைகள் அனைத்திலும் ஊழலோ ஊழல், விழாக் கொண்டாட்டங்களுக்கு ஊதாரிச் செலவுகள், செயல்படாத அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாயில் பப்ளிஸிட்டி மோசடி என்று அரசு கஜானாவை காலி செய்து கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு, சாமான்ய மக்களின் போக்குவரத்து சேவையில் கை வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அ.தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேட்டினால் நிலை குலைந்து விட்ட போக்குவரத்து கழகங்களை மீட்கிறேன் என்ற போர்வையில் வருடத்திற்கு 3,600 கோடி ரூபாய் பேருந்து கட்டண உயர்வை இரவோடு இரவாக அறிவித்து, வாங்கும் சக்தி குறைந்து தாங்கும் சக்தியற்ற மக்கள் மீது பெரும் சுமையை ஏற்றியிருக்கும் அ.தி.மு.க. அரசுக்கு, தி.மு.க. சார்பில் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். சாமான்ய மக்களிடம் இரக்கமின்றி விளையாடிய எந்த அரசும் விபரீதத்தைத்தான் சந்தித்து இருக்கிறது என்ற சரித்திரப் படிப்பினையை அ.தி.மு.க. அரசு உணர்ந்து, அதனை எச்சரிக்கையாகக் கொண்டு, உடனடியாக பேருந்து கட்டண உயர்வைத் திரும்ப பெற வேண்டும்.
    கண்டன ஆர்ப்பாட்டம்

    இதனை வலியுறுத்தும் வகையில் தி.மு.க. சார்பில் வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், கட்சியின் அந்தந்த மாவட்ட செயலாளர் தலைமையிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் தி.மு.க. அனைத்து அணி நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை வெற்றியடைய செய்யவேண்டும். ஒத்த கருத்துடைய தோழமை கட்சிகளும் ஆர்ப்பாட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad