Header Ads

  • சற்று முன்

    புதுக்கோட்டையில் மணல் கொள்ளை..! தடுக்குமா அரசு! பொதுமக்கள் வேதனை

    "மணல்குவாரிகளை இழுத்து மூடணும்னு நீதிமன்றம் உத்தரவு போட்டாலுமே, எங்கள் ஊர் மணல் கடத்தல்காரர்கள், இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுட்டு, மணலை அள்ளிக்கிட்டுத்தான் இருப்பாங்க. ஏன்னா, மழையூர் மணலுக்கு மார்க்கெட்டில் நல்ல கிராக்கி இருக்கிறது. அதோடு அதற்கு ஆயுளும் அதிகம்" என்று தங்கள் ஊரில் தொடர்ந்து நடக்கும் மணல் கொள்ளையின் ரகசியத்தை வேதனையோடு சிலாகிக்கிறார்கள் மழையூர் மக்கள்.புதுக்கோட்டை மாவட்டம் மழையூரில் உள்ள அக்கினியாற்றில் இந்தக் கொடும் பனிக்காலத்திலும் மணல்கொள்ளை கனஜோராக நடந்துவருகிறது. ராத்திரி, பகல் என்று பாராமல், சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் இந்த மணல் கொள்ளையர்களைத் தடுக்கும் படியும் அவர்களைக் கைதுசெய்யும்படியும் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.ஆகியோருக்கு மழையூர் மக்கள் தொடர்ந்து மனு மேல் மனு கொடுத்திருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து கடந்த மாதம் சப் கலெக்டர் ரெய்டு நடத்தினார். மணல் லாரிகளையும் பிடித்தார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை மழையூர் மக்களே விவரித்தார்கள்.



    "அதெல்லாம் வெறும் கண்துடைப்பு நடவடிக்கைகள்னு இரண்டு நாள்களில் தெரிந்துவிட்டது. கைப்பற்றப்பட்ட மணலை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புக் கட்டடத்தைக் கட்டி வரும் கான்ராக்ட்காரருக்கு ஒரு யூனிட் மூவாயிரம் ரூபாய்க்கு அதிகாரிகளே வித்துட்டாங்க"என்றவர்கள். தொடர்ந்து, "மழையூரில் இந்த மணல் கொள்ளையை எங்களால் தடுக்க முடியாமல் இருப்பதற்குக் காரணம், இந்த மணலுக்கு மார்க்கெட்டில் இருக்கும் கிராக்கிதான். ஒவ்வொரு ஆற்று மணலுக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில் எங்கள் ஊரில் ஓடும் அக்கினி ஆற்று மணலுக்கு தனியே ஒரு குணம் உண்டு. 'அக்கினி ஆற்று மணலில் வீடு கட்டினவன் அரசாளுவான்'னு எங்கள் பகுதியில் பழமொழியே இருக்கு. அதை இந்த மணல் கொள்ளையர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, மணலை நல்லா மார்க்கெட்டிங் பண்ணிட்டாங்க. அந்தப் பெயரையும் எங்களால் மாற்றவும் முடியவில்லை. மணல் கொள்ளையையும் தடுக்கவும் முடியவில்லை" என்றார்கள். இயலாமையும் ஏமாற்றமும் பொங்கும் குரலில்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad