புத்தாண்டு ராசி பலன் - மிதுனம்
அரசு காரியங்கள் அசுர வேகத்தில் நடக்கும் துடிப்பான ஆண்டாக இருக்கும். கண்டச் சனியைக்கண்டு கலங்காமல் இருங்கள். குருபகவானின் தீர்க்கமான பார்வைபட்டு பல்லாண்டு கால முயற்சிகள் பலிதமாகும் வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் அடுத்தவர் வாழ்க்கையைக் கெடுத்து வாழ நினைக்காத உங்களோடு பழகுவதில் அனைவரும் பெருமிதம் கொள்வார்கள். அடுத்தவரின் கஷ்டங்களைச் சுமந்து அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய காரணகர்த்தாவாக விளங்குவீர்கள். எவ்வளவு பெரிய கடன் நெருக்கடிகள் வாட்டினாலும் எவரிடத்திலும் கை நீட்ட மறுக்கும் தன்மானமிக்கவர்களாக இருப்பீர்கள். பிள்ளைகளால் பெற்றோர்கள் ஏற்றம் பெறுவார்கள். வசிக்கும் ஏரியாவில் புது அந்தஸ்தைப் பிள்ளைகள் பெறுவதைப் பார்த்து நீங்கள் பெருமை கொள்வீர்கள். தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிக் கொண்டு நிரந்தர நாற்காலிகளுக்காக காத்திருக்கும் உங்களுக்கு ஜாப் பெர்மினென்ட் ஆகும். குரூப் தேர்வில் வெற்றிவாகை சூடுவீர்கள்.
அள்ளஅள்ள குறையாத செல்வங்களை வாரி வழங்கும் சுக்ரபகவானை யோகாதிபதியாகவும், விரையாதிபதியாகவும் கொண்ட நீங்கள் அடுத்தவருக்கு உதவிடுவதில் நவீன பாரிவள்ளலாகவே விளங்குவீர்கள். மற்றவர்களின் கஷ்டங்களை தனதாக்கிக் கொண்டு அவர்களுக்கு இயன்ற அளவு உதவிகள் செய்திட முயல்வீர்கள். சிக்கனம் சேமிப்பிலும் உங்களை அடித்து கொள்ள ஆளே கிடையாது என்று சொல்லலாம். பாத்திரம் அறிந்து பிச்சையிடும் பக்குவமிக்கவர்கள் நீங்கள். வெளியிடங்களில் இருந்து வரவேண்டிய பணபாக்கிகளை வசூலிப்பதில் முனைப்பு காட்டுங்கள். கணவரை இழந்து தவிக்கும் இளம் கைம்பெண்கள் நல்லதொரு இனிய வாழ்க்கை அமையப் பெறுவார்கள். வழக்கறிஞர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிக்கொணரும் விதமான வாய்ப்புகள் அமையும். வம்புவழக்கு என நீதிமன்றங்களுக்கு நடையாய் நடப்பவர்களுக்கு பிரச்னைகள் முடிந்து நிம்மதி பிறக்கும். அரசியல்வாதிகள் தலைமையின் நன்மதிப்பைப் பெற்று புதுப்பதவிகளில் அலங்காரமாக அமர்வார்கள்.
பேன்ஸி மற்றும் அலங்கார தொழிலில் இருப்பவர்கள் வருமானங்களால் பளிச்சிடுவார்கள். தென் மாவட்டங்களில் இருந்து வந்து தலைநகரங்களில் வருமானத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் குடும்பங்களில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவுக்கு வரும். அரசுப் பணியாளர்களின் புதுவீடு வாங்கும் முயற்சிகள் சாதகமாக இருக்கும். வண்டிவாகனங்கள் வாங்கும் முடிவிலிருப்பவர்கள் களத்தில் கவனமாக இறங்க வேண்டும். குடும்பத்தின் கௌரவத்தைக் காக்கும் பொருட்டு சில விருப்பங்களை விட்டுக்கொடுக்க வேண்டிவரும். திருமண காரியங்களால் உறவினர்கள் நீண்டகாலங்களுக்கு பிறகு கூடுவார்கள். கந்து வட்டிக்காரர்களிடம் சிக்கியிருந்த சொத்துகளை மீட்டு பத்திரங்களை பத்திரமாக வீடு வந்து சேர்ப்பீர்கள். ஆசிரியர் தகுதித் தேர்வில் இதுவரை தோல்விகளைச் சந்தித்தவர்கள் இந்தாண்டு வெற்றி பெறுவார்கள். ஆசிரியர்களை விட மாணவர்களின் அறிவுத்திறன் பலமாக இருக்குமென்பதால் ஆசிரியர்கள் நிறைய ஹோம்ஒர்க் செய்ய வேண்டிவரும். சாப்ட்வேர் கம்பெனிகளில் பணிபுரிபவர்களின் வெளிநாட்டு வேலை முயற்சிகள் சாதகமாக இருக்கும். நூலகர்களுக்கு எழுத்தார்வம் மிகுதியாக இருக்கும். மொழிபெயர்ப்பாளர்கள் லத்தீன் அமெரிக்க நாவல்களின் பக்கம் கவனத்தைச் செலுத்துவார்கள். அரசியல் கட்டுரையாளர்களின் எழுத்துக்களுக்கு மதிப்பு உயரும். அடுத்தவரை கிண்டலடித்து எழுதுபவர்கள் சுயஒழுக்கக் கேடுகளால் அவமானங்களைச் சந்திக்க நேரிடலாம். சில அரசியல் கட்சிகளின் முழுநேர ஊழியர்கள் உட்கட்சிப் போராட்டத்தில் நெருக்கடிகளைச் சந்த்தித்து வெளியேறி காலம்போன காலத்தில் குடும்பத்திற்காக உழைக்கும் நிலை ஏற்படலாம்.
கருத்துகள் இல்லை