Header Ads

  • சற்று முன்

    சிவகங்கை அருகே நாய்க்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்த கிராமத்தினர்.....



    சிவகங்கை அருகே மதகுபட்டியில் டாஸ்மாக் கடையை காவல் காக்கும் நாய்க்கு அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் வளைகாப்பு நடத்தினர். சிவகங்கை அருகே மதகுபட்டி ஊராட்சியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகில் தனியார் பார் ஒன்றும் உள்ளது. கடந்த ஆண்டு இந்த பாரில் ஆதரவற்ற பெண் நாய்க்குட்டி ஒன்று தஞ்சம் அடைந்தது. பாரில் குடிப்பிரியர்கள் தின்றுபோடும் மீதமுள்ள உணவு வகைகளை உண்டு வளர்ந்த நாய் பாருக்கு விசுவாசமாக காவல் காக்கும் பணியை தொடங்கியது. இரவு 10 மணிக்கு மேல் டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டதும் கடை வாசலில் படுத்துக்கொள்ளும். நாயின் விசுவாசமான காவல் பணியை பார்த்து வியப்படைந்த பார் ஊழியர்கள் அதற்கு கருத்தம்மா என்று செல்லமாக அழைக்கத்தொடங்கினார்கள். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த கருப்பி பருவ வயதை எட்டிப்பிடித்தாள். வழக்கமாக கார்த்திகை மாதம் (கொஞ்சம் அட்வான்சாக ஐப்பசி மாதத்திலேயே) காதல் மையலில் திளைக்கும் நாய்களுக்கு உள்ளதை போலவே கருப்பியும் காதல் பரவசத்திற்கு மயங்கியதில் கர்ப்பிணியானாள். கருத்தம்மா கர்ப்பிணியானதை அறிந்த ஊழியர்கள் தங்கள் நன்றியை காட்ட அதற்கு வளைகாப்பு நடத்த தீர்மானித்தனர். நேற்று காலை அப்பகுதியில் உள்ள நண்பர்கள், வாடிக்கையாளர்களுக்கு வளைகாப்பு நடத்தவுள்ளதை தெரிவித்தனர். 

    சிலர் அதை கேலி செய்தாலும் சிலர் அதற்கு மனமுவந்து பணம் கொடுத்த உதவி செய்தனர். காலையில் கருத்தம்மாவை குளிப்பாட்டி துண்டு, மாலைகள்,மல்லிகைப்பூ அணிவித்து சந்தனம், குங்குமம் நெற்றியில் இட்டு கால்களில் வளையல்கள் அணிவித்து வளைகாப்பு நடந்தது. வளைகாப்பிற்கு வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. கருப்பிக்கு வளையல் அணிவித்து அட்சதை தூவி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அத்தனையும் கருத்தம்மா இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டாள். வளைகாப்பிற்கு வந்திருந்தவர்களுக்கு மதுவுடன், பிரியாணி விருந்தும் வழங்கப்பட்டது. இது குறித்து வளைகாப்பு நடத்திய பழனி, மணிகண்டன்,ரமேஷ் இளமதி கூறுகையில்., ஊருக்கு வெளியே உள்ள டாஸ்மாக் கடையில் லட்சக்கணக்கில் சரக்குகளும் பணமும் இருக்கும் இரவு நேரங்களில் இவற்றை பாதுகாக்க ஆட்கள் சென்று வந்தனர். கருப்பி வந்ததில் இருந்து இரவு 10 மணிக்கு மேல் இங்குள்ள கடைக்கும், பாருக்கும் அருகில் யாரும் நுழையவே முடியாது. அந்த அளவுக்கு கருப்பி காவல் பணியில் ஈடுபடுவதில் கெட்டிக்காரி. தவிர குடிபோதையில் பணத்துடன் படுத்துக்கிடப்பவர்கள் பாக்கெட்டில் பணம், வாட்ச், தங்க நகைகளை அடுத்தவர் திருடிச்செல்ல விடாமல் குடிபோதையில் இருந்தவர் தானாக எழுந்து செல்லும் வரை அவரை பாதுகாக்கும். திருடும் நோக்கில் வருபவர்களை பாரில் நுழையவே விடாது. அதனால் தான் இதற்கு நன்றி கடனாக மனிதர்களின் முதல் பிரசவம் நல்ல படியாக நடக்க வளைகாப்பு செய்வது போல செய்தோம் என்றார். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad