Header Ads

  • சற்று முன்

    வைகுண்ட ஏகாதசி



    மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது. இது கிரெகொரியின் நாட்காட்டியில் திசம்பர்-சனவரி மாதங்களில் வரும். வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். இந்நாளின் முன்னிரவில் உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வர். விடிகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்குதிசையில் என்றும் மூடப்பட்டிருந்து இன்று மட்டுமே திறக்கும் "சொர்க்க வாயில்" என்றழைக்கப்படும் வாயில்வழியே சென்று இறைவனை வழிபடுவர்.
    திருவரங்கம் கோவிலில் இந்நாளின் முந்தைய பத்து நாட்களில் "பகல்பத்து" என்றும் பிந்தைய பத்து நாட்களில் "இராப்பத்து" என்றும் சிறப்பாக விழா நடத்தப்படுகிறது.
    இந்துக்கள் ஒவ்வொரு ஏகாதசி நாளிலும் உண்ணாநோன்பிருந்து இறைவனை வழிபடுவதால் தங்களின் பாவச்செயல்கள் மன்னிக்கப்பட்டு சங்கடங்கள் தீரும் என நம்புகின்றனர். விஷ்ணுபுராணம் என்ற நூலில் அனைத்து ஏகாதசி நாட்களிலும் உண்ணாநோன்பு இருந்து பெறும் பயனை வைகுண்ட ஏகாதசி அன்று இருக்கும் ஒருநாள் விரதத்தால் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.[1]. இதனால் இந்நாள் சிறப்பினைப் பெறுகிறது.
    புராண நூலின்படி திருமால் தனது எதிரிகளாகவிருந்த இரு அரக்கர்களுக்கு இந்நாளன்று வைகுண்டத்தின் கதவுகளைத் திறந்ததாகவும் , இக்கதையைக் கேள்விப்பட்டு இவ்வாயில் வழியே பெருமாளின் திருவுரு வெளியே உலா வரும்போது தரிசிப்பவர்கள் அனைவருக்கும் தாம் பெற்ற நிலை கிடைக்கவேண்டும் என அவர்கள் வரம் வேண்டியதாகவும் கூறப்படுகிறது.
    மகாபாரதத்தில் குருச்சேத்திரப் போரின் துவக்கத்தில் கிருட்டிணன் அருச்சுனனுக்கு இந்த நாளில்தான் பகவத் கீதை விளக்கங்களை நிகழ்த்தியதாகக் கருதப்படுகிறது.



    திருவரங்கம் 
    தமிழ்நாட்டில் அமைந்துள்ள வைணவத்தலங்களில் முதன்மையாகக் கருதப்படுகின்ற திருவரங்கத்தில் உள்ள அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 21 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பகல்பத்து, இராப்பத்து என்று இரு பகுதிகளாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருநாளும் திருமாலின் திருவுரு வெவ்வேறு அலங்காரங்களில் வெவ்வேறு வாகனங்களில் உலா வருகிறது. ஏகாதசி நாளன்று இரத்தினங்களால் வேய்ந்த ரத்னாங்கி என அழைக்கப்படும் உடையில் கருவறையிலிருந்து வெளிவந்து ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருக்க வடக்கு வாயில் ("பரமபத வாசல்", சொர்க்க வாசல்" என்றும் அழைக்கப்படுகிறது) வழியே உலா வருவதைக் காண பெருந்திரளான பக்தர் கூட்டம் கூடும். இந்த வாயில் இந்த நாளிலே மட்டுமே திறக்கப்படும்


    திருமலை 
    ஆந்திர மாநிலத்தின் திருப்பதி மலைமீதுள்ள திருமலையிலும் இத்தகைய விழா கொண்டாடப்படுகிறது. இங்குள்ள சிறப்பு வாயில் "வைகுண்ட துவாரம்" என அழைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி நாளில் மட்டுமே திறக்கப்படும் இவ்வாயில் வழியே சென்று வழிபடுவோர் வீடுபேறு பெறுவர் என நம்பப்படுகிறது.[2] எனவே இத்திருநாளில் பெருந்திரளான பக்தர்களும் உயர்நிலையாளர்களும் திரள்கின்றனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad