Header Ads

  • சற்று முன்

    சிபிஎம் தஞ்சை மாவட்ட செயலாளராக கோ.நீலமேகம் தேர்வு பாபநாசம்



    சிபிஎம் தஞ்சாவூர் மாவட்டச்செயலாளராக கோ.நீலமேகம் தேர்வு செய்யப்பட்டார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்ட 22 ஆவது மாநாடு, பாபநாசம் சாய் மஹாலில்  தோழர் எஸ்.டி.சரஸ்வதி நினைவு அரங்கில் டிச 19 ந்தேதி செவ்வாய் தொடங்கி நடைபெற்றது. மாநாட்டிற்கு கோ.நீலமேகம், ஆர்.கலைச்செல்வி, ஆர்.வாசு ஆகியோர் தலைமை வகித்தனர்.வரவேற்பு குழுத்தலைவர் பி.விஜயாள் வரவேற்றார்.
    மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தொடக்க உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் மாநாட்டை வாழ்த்திப் பேசினார். நிறைவு நாளான வியாழன் அன்று கட்சியின் மாவட்ட செயலாளராக கோ.நீலமேகம் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக ஏற்கனவே செயல்பட்டு வந்த 13 பேரும்  அதே பொறுப்பில் தொடருவார்கள் எனவும்,  தேர்வு செய்யப்பட்ட 41 பேர் கொண்ட  மாவட்டக் குழு உறுப்பினர்கள், விரைவில் கூடி புதிய செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது. மாநில மாநாட்டு பிரதிநிதிகளாக 18 பேரும், மாற்றுப் பிரதிநிதிகளாக மூவரும் தேர்வு செய்யப்பட்டனர்.
    மாநிலச்  செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன்,புதிய நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் நிறைவுரையாற்றினார். 
    நிறைவாக பாபநாசம் ஒன்றியச்செயலாளரும், வரவேற்பு குழு செயலாளருமான  பி.எம்.காதர் உசேன்  நன்றி கூறினார்.
    பாபநாசத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்ட மாநாட்டு தீர்மானங்கள்இம்மாநாட்டில்  தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்கள், விவசாயிகளை பாதிக்கும்  மீத்தேன், ஷேல்கேஸ், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பை மீறி நிறைவேற்றக்கூடாது. 


    காவிரி நடுவர் நீதிமன்ற இறுதித் தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம், நீர் ஒழுங்காற்றுக் குழுவை மத்திய அரசு உடனடியாக அமைத்திட வேண்டும்.
    தஞ்சை மாவட்டத்தில் கோவில் மற்றும் மடங்களுக்கு சொந்தமான நிலங்களையும் குடியிருப்பு மனைகளையும் குத்தகைதாரர்களுக்கே சொந்தமாக்கி தரவேண்டும். குத்தகைதாரர்களுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்கவேண்டும்.
    தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகள்  செய்து, ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பி, கூடுதலாக பள்ளிகளை திறந்து  அரசுப்பள்ளிகளை காப்பாற்ற வேண்டும்.
    எட்டு மாவட்ட மக்கள் பயன்பெற்று வரும் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போதிய மருத்துவர், செவிலியர் நியமித்து தட்டுப்பாடின்றி உயிர் காக்கும் மருந்துகள், நவீன கருவிகள் வழங்கவேண்டும். கும்பகோணம் மாவட்ட தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்தி சீரமைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி 24 மணிநேரமும் மருத்துவர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாநிலத்தின் மையப்பகுதியான தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்.
    ஓராண்டுக்கும் மேலாக நடத்தப்படாமல் உள்ள உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
    தஞ்சாவூர், பாபநாசம், குடந்தை வழியாக இயங்கி வந்த  மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க வேண்டும். 


    முடியாத பட்சத்தில் அதே நேரத்தில் புதிதாக ஒரு ரயிலை இயக்க வேண்டும். பல்லாண்டுகளாக பேசப்பட்டு வரும் தஞ்சை – பட்டுக்கோட்டை ,தஞ்சை – அரியலூர் மற்றும் கும்பகோணம்-விருத்தாச்சலம் திட்டங்களுக்காக புதிய பட்ஜெட்டில்  மத்திய அரசு  நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
    தஞ்சை-கும்பகோணம்-விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைவு படுத்த வேண்டும்.
    தமிழக அரசு காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் உரிய சதவீத அடிப்படையில் இழப்பீடு கிடைக்க  உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். 
    100 நாள் வேலையை முறைகேடின்றி தொடர்ச்சியாக செயல்படுத்த வேண்டும். சட்டபூர்வமான  ரூ 205/-  சம்பளத்தை குறைக்காமல் வழங்க வேண்டும்.  சம்பளமும் நிலுவையில்லாமல் வழங்கப்பட வேண்டும்.  தகுதியான அனைவருக்கும் ஜாப் கார்டு வழங்க வேண்டும். நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு 
    கல்வி வேலைவாய்ப்பில் உரிய இட ஒதுக்கீடு வழங்கவேண்டும். நீண்ட காலமாக விசாரணை இன்றி சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யவேண்டும். பள்ளிவாசல், தேவாலயம் கட்டவும், புனரமைக்கவும் தாமதமின்றி அனுமதி  வழங்கவேண்டும்.  ஆறுகள், ஏரிகள்  குளங்கள், வாய்க்கால்களை தூர்வார வேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள  தொகுப்பு வீடுகளை இடித்து புதிதாக கட்டித்தரவேண்டும்.பாபநாசம், கும்பகோணம் பகுதியில் அரசு விவசாய கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி அமைத்து தரவேண்டும். பாபநாசம்-சாலியமங்கலம் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைத்து தரவேண்டும்.
    திருட்டு, கொலை, கொள்ளை,  போன்ற சமூக விரோத செயல்களை தடுத்து நிறுத்தி,காவல்துறையின் ஜனநாயக விரோதப் போக்கை கைவிட வேண்டும். பாபநாசம் பேரூராட்சியில் குப்பைகளை அகற்றி, சாலைகளை செப்பனிட வேண்டும். பண்டாரவடையில் தடுப்பணை அமைத்து 10 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி செய்து தரவேண்டும். தஞ்சை மாவட்டத்தில் மும்முனை மின்சாரம் தடையின்றி 20 மணி நேரம் கிடைக்கவும், மின்வாரிய  காலிப்பணியிடங்களை நிரப்பவும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சை மாவட்ட கடைமடைப் பகுதிக்கு காவிரி தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நரிக்குறவர் இன மக்களுக்கு தொகுப்பு வீடு கட்டித் தரவும், அவர்கள் குழந்தைகள் கல்வி கற்க தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டும். நீதிமன்றம் உத்தரவிட்டும் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நிலையை மாற்றி, துப்புரவு பணிகளுக்கு நவீன கருவிகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    அரசுப் போக்குவரத்து கழகம், விரைவுப் போக்குவரத்து கழகம் ஆகியவற்றில் உள்ள காலாவதியான பேருந்துகளை நிறுத்தி விட்டு, புதிய பேருந்துகளை இயக்க வேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad