Header Ads

 • சற்று முன்

  புத்தாண்டு ராசி பலன் - கும்பம்


  கடினமான உழைப்பிற்கு பின்னர் கரையேறும் ஆண்டாக இருக்கும். இருந்தாலும் உங்கள் வெற்றிக்கொடி பறந்தே தீரும். ஜோதிடத்தை நம்புகிற அனைவரும் உண்ர்ந்து பயப்படுவது சனி பகவானுக்குத்தான். அதே போல ஜோதிடத்தை நம்பாமல் வெளியிலிருந்து விமர்சிக்கிறவர்களுக்கு கூட சனியைப் பற்றி தெரியாமல் இருக்காது. ‘‘நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்..!’’ – என்பதுதான் சனிக்கான பஞ்ச் டயலாக். பஞ்சபூத தத்துவத்தில் ஆகாயத்திற்கு அதிபதி சனிபகவான். அப்படிப்பட்ட சனியின் அனுக்ரகம் உங்களுக்கு இருக்கிறது என்பது சாதாரண விஷயமில்லை. சனிபகவான் நல்லவர். சனிபகவான் நீதிமான். நீங்கள் உண்மையானவர்கள். அடுத்தவரின் உடமைகளுக்கு துளி கூட ஆசைப்படாதவர்கள். வியர்வை சிந்தி கடினமாக உழைத்து சம்பாதிக்கும் எண்ணம் மேலோங்கி இருக்கும். எக்காரியத்தையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிப்பவர்கள் அல்ல நீங்கள். நின்று நிதானமாக யோசித்து  வெற்றி கொள்ளக்கூடியவர்கள். எதிர்த்து மோதுகிறவர்களின் பலம் பலகீனம் அறிந்து செயல்படக்கூடியவர்கள். எப்போதும் எவ்விஷயமாக இருந்தாலும் அப்டேட்டாக விரல்நுணியில் வைத்திருப்பீர்கள்.
  வருமானத்திற்கான வழிகளில் சிறிது சறுக்கல்கள் இருந்தாலும் பாதிப்புகள் பெரிய அளவில் இருக்காது. நிறைகுடம் நீர் தழும்பாது என்பது போல அடுத்தவர்கள் பேசுவது என்னவாக இருந்தாலும் விரும்பிக் கேட்டு உள்வாங்கிக் கொள்ளும் பழக்கம் இருக்கும். போதிய வருமானங்கள் ஏதுமின்றி தடுமாறிக் கொண்டிருப்பவர்களின் வாழ்வில் வசந்தம் வீசும். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு  வயோதிகம் வாட்டாதவாறு இளமை நிலைத்திருக்கும். திருமண வயதை நெருங்கிவிட்ட பிள்ளைகளுக்கு தகுந்த வரன் அலைந்து திரியாமல் அமையும். மருத்துவத்துறை சம்மந்தப்பட்டவர்களுக்கும் வருமான வரவுகள் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு ஆண்களாலும் ஆண்களுக்கு பெண்களாலும் சற்று பிரச்னைகள் வருமென்பதால் தவறான உறவுகளை வேரறுத்துக் கொள்வது நல்லது. உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தாயாரால் மருத்துவ செலவுகள் அதிகமாக இருந்தாலும் அதற்குண்டான பொருளாதாரச் சூழல் சாதகமாக கை கொடுக்கும் என்பதால் டென்ஷன் இருக்காது. பென்சன்தாரர்கள் தங்கள் உடல் ஆரோக்யத்தின் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டிவரும். சர்க்கரை நோயாளிகளுக்கு சுகர்லெவல் எக்குத்தப்பாக இருக்குமென்பதால் முறையான நடைபயிற்சியை விடாமல் மேற்கொள்வது நல்லது. சிலர் பூர்வீக இடங்களை விட்டு வெளியூர்களில் வசிக்க நேரிடலாம்.
  ஆசிரியர்கள் மாணவர்களிடம் தங்கள் பிள்ளைகள் மீது செலுத்தும் பாசத்திற்கு நிகராக அன்பைப் பொழிவார்கள். பொதுத்துறை அதிகாரிகள் அதிக வரவுகளுக்கு ஆசைப்பட்டு தேவையில்லாத தொந்தரவுகளில் மாட்டிக்கொள்ளாமல் கவனமுடன் இருக்க வேண்டும். மருத்துவர்கள் புதிய மருத்துவமனைக்காக வாங்கிய வங்கி கடன் தவணைகளை கட்டி முடிப்பார்கள். திருமணமாகாத இளம் வக்கீல்களுக்கு நல்ல வரன் அமையும். இல்லத்தரசிகள் வண்டி வாகன பயிற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. தொழில் அதிபர்கள் புதிய முதலீடுகளை கவனமுடன் கையாள வேண்டும். மின்சாதன பொருட்களில் ஈடுபாடுள்ளவர்கள் தக்க பாதுகாப்புகளோடு ஈடுபட வேண்டும். ஆன்மிக ஸ்தலங்களுக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று திரும்பும் வாய்ப்புகள் அமையும். விமான நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் சம்பளங்களை ஒவ்வொரு மாதமும் தள்ளாடித் தள்ளாடிதான் பெற முடியும். ஆன்மிக ஸ்தலங்களில் பணிபுரிபவர்கள் தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படுவார்கள். சினிமாதுறையினர் தள்ளாட்டத்தை சந்திக்கவேண்டி வரும் என்பதால் கவனம் தேவை. மாணவிகளுக்கு வெளிநாடு கல்வி வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும்.

  கருத்துகள் இல்லை