சென்னையில் 2 நாட்களாக தொடர்ந்த செவிலியர்கள் போராட்டம் வாபஸ்!
சென்னை: டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் மேற்கொண்டிருந்த உள்ளிருப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கருடனான பேச்சுவார்த்தையை ஏற்று நாளை பணிக்கு திரும்பவுள்ளதாக செவிலியர்கள் தெரிவித்துள்ளனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் கடந்த 2 நாட்களாக செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று மாலை அமைச்சர் விஜயபாஸ்கருடன் தலைமைச்செயலகத்தில் செவிலியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஊதியத்தை உயர்த்தி வழங்குவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு செவிலியர்கள் பணிக்கு திரும்பவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். இந்நிலையில் போராட்டத்தை திரும்பப்பெறுவதாக செவிலியர்கள் தெரிவித்துள்ளனர். அமைச்சர் விஜயபாஸ்கருடனான சுமூக பேச்சுவார்த்தையை அடுத்து நாளையே பணிக்கு திரும்பவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை