பேச்சுவார்த்தை தோல்வி ! 3 வது நாளாக தொடரும் செவிலியர் போராட்டம்
சென்னை: பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மருத்துவர் தேர்வு வாரியம் மூலமாக கடந்த 2015ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 10,000 செவிலியர்களுக்கு இதுவரை பணி நிரந்தர ஆணை வழங்கப்படவில்லை. இதுவரை அவர்களுக்கு தொகுப்பு ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தங்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படாததால், செவிலியர்கள் சென்னையில் உள்ள மருத்துவ மற்றும் ஊரக நலப்பணி துறை அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்தனர். இதனால் திங்கட்கிழமை காலையில் இருந்தே அதிக அளவில் அந்தப் பகுதியில் செவிலியர்கள் கூடியதால் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை அறிவித்த அவர்கள் இரண்டு நாட்களாகத் தொடர்ந்து போராடி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை செவிலியர்களின் பிரதிநிதிகள் தலைமைச் செயலகம் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களோடு அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில், கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். இதனையடுத்து, தருமபுரி உள்ளிட்ட சில மாவட்டங்களைச் சேர்ந்த செவிலியர்கள் போராட்டத்தை விடுத்து பணிக்குத் திரும்பினர். ஆனால், இன்னும் பலர் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள். இந்நிலையில்,அங்கு ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் இன்று மாலைக்குள் செவிலியர்கள் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே, செவிலியர்கள் புதன்கிழமை முதல் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும், இதுவரை விடுமுறை எடுத்ததற்கு காரணம் கேட்டும் பொதுசுகாதாரத்துறை செவிலியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு பதிலளிக்கத் தவறினால் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை