ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்குதான் இரட்டை இலை கிடைக்கும் என்றார் - நத்தம் விஸ்வநாதன்.
திண்டுக்கல்: அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துவிட்டாலும் மனங்கள் இணையவில்லை என்று மைத்ரேயன் கூறியது உண்மை என்றும் ஆனால் அது காலப்போக்கில் மாறிவிடும் என்றும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார். அதிமுகவில் இரு அணிகளும் இணைந்து 3 மாதங்கள் ஓடிவிட்டாலும் இன்னும் மனங்கள் இணையவில்லை என்பதை போன்ற ஒரு கருத்தை மைத்ரேயன் எம்.பி. தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த கருத்தை அமைச்சர்கள் மறுத்தனர். அனைவரும் ஒற்றுமையாக தான் உள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால் தம்பிதுரையோ மைத்ரேயன் பதிவிட்டிருந்த கருத்து அவரது சொந்த கருத்து என்றார். மீண்டும் மைத்ரேயன் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் தான் கூறிய கருத்துகள் அனைத்தும் தம்பிதுரை கூறுவது போல் சொந்த கருத்து அல்ல என்றும் ஒட்டுமொத்த தொண்டர்களின் கருத்து என்றும் பதிவிட்டிருந்தார். எனினும் முதல்வரும், துணை முதல்வரும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. திண்டுக்கல்லில் ஒரு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறுகையில், தமிழக அமைச்சர்களுக்கு நாவடக்கம் தேவை. ஜெயலலிதா இல்லாததால் அமைச்சர்கள் ஒவ்வொரு கருத்தை கூறுகின்றனர். மைத்ரேயனின் கருத்தில் மாற்றுக் கருத்து இல்லை. காலப்போக்கில் சரியாகிவிடும். ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்குதான் இரட்டை இலை கிடைக்கும் என்றார் நத்தம் விஸ்வநாதன்.
கருத்துகள் இல்லை