Header Ads

  • சற்று முன்

    ஆர்.கே நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-இல் இடைத் தேர்தல்





    முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு காலியான ஆர்.கே.நகர் எனப்படும் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கான சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் டிசம்பர் 21 அன்று நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
    இதன் மூலம் சென்னை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகிறது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தாங்கள் செலுத்திய வாக்கு சரியான வேட்பாளருக்குத்தான் பதிவாகியுள்ளதா என்பதை வாக்காளர்கள் உறுதிப் படுத்திக்கொள்ளும் வசதியும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் செய்யப்படவுள்ளது.
    கடந்த நவம்பர் 21 அன்று, அந்தத் தொகுதிக்கான இடைத் தேர்தலை டிசம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
    அந்தத் தொகுதியில், 44,999 போலி வாக்காளர்களின் பெயர்களை இடைத் தேர்தலுக்கு முன்னதாக நீக்க வேண்டும் என்று தி.மு.க தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், ஏற்கனவே 45,819 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதால் டிசம்பர் இறுதிக்குள் தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
    ஏற்கனவே இந்தத் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12 அன்று இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
    அ.தி.மு.க அப்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வி.கே.சசிகலா ஆகியோர் தலைமையில் இரு அணிகளாக பிளவு பட்டிருந்ததால், பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனன் இரட்டை மின்விளக்கு சின்னத்திலும், சசிகலா தலைமையிலான அ.தி.மு.க அம்மா அணி சார்பில் டி.டி.வி. தினகரன் தொப்பி சின்னத்திலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.


    தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ், பா.ஜ.கவின் கங்கை அமரன் உள்ளிட்ட 62 பேர் அப்போது போட்டியிட்டனர். ஆனால், முறைகேடாக வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஏப்ரல் 10 அன்று அறிவித்தது.
    தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இடைத் தேர்தலில், வரும் நவம்பர் 27 அன்று தொடங்கும் வேட்பு மனுத் தாக்கல் டிசம்பர் 4 அன்று முடிவடைகிறது. வேட்பு மனுக்கள் டிசம்பர் 5 பரிசீலனை செய்யப்படும் என்றும், டிசம்பர் 7 அன்று வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
    தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை டிசம்பர் 24 அன்று நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
    1977-இல் உருவாக்கப்பட்ட, சென்னை வடக்கு நாடாளுமன்ற தொகுதியில் உள்ள இந்த சட்டமன்றத் தொகுதியில் இது வரை நடந்த தேர்தல்களில் 7 முறை அ.தி.மு.கவும், தி.மு.க காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
    ஆர்.கே நகர் தேர்தல் நடைபெறும் அதே நாளில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள இரு தொகுதிகள், மேற்கு வங்கம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள தலா ஒரு தொகுதிக்கு இடைத் தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad