மதுரை நிகழ்சியில் ஒ .பி .எஸ்யை புறகணித்த இ.பி .எஸ்
மதுரை தோப்பூர் நான்கு வழிச் சாலையில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஏற்றி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான விழாவில் பங்கேற்க வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று வழி நெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த விழாவில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி 100 அடி உயர கம்பத்தில் அ.தி.மு.க கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் ஒன்றுபட்டு அ.தி.மு.கவை காக்க உறுதி பூண்டுள்ளதாக கூறினார். இதனிடையே மதுரையில் இருந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க கொடியேற்று விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார்.அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் தன்னை கொடியேற்ற அழைக்காமல் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை கொடியேற்ற வைத்ததை ஏற்க முடியாமல் ஓ.பன்னீர் செல்வம் விழாவை புறக்கணித்ததாக ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களும் அ.தி.மு.க கட்சி கொடியேற்று விழாவில் பங்கேற்கவில்லை. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திட்டமிட்டு தங்களை புறக்கணித்ததாக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வரவேற்பு பேனர்களில் முதலமைச்சர் படத்தை மட்டும் இடம்பெறச் செய்துள்ளதாகவும், ஓ.பி.எஸ் படத்தை இடம்பெறச் செய்யவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.கொடிகம்ப கல்வெட்டிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ போஸ் ஆகியோரின் பெயர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ் பெயர் ஓரமாக இடம்பெற்றுள்ளதாகவும் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை