இரட்டை இலை சின்னம் கிடைத்தற்கு ..ஜெ. சமாதியில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை செலுத்தினர்
சென்னை : இரட்டை இலை சின்னம் கிடைத்ததை கொண்டாடும் விதமாக மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினர். ஏப்ரல் மாதம் முடக்கப்பட்ட அதிமுகவின் இரட்டை இலை சின்னம் 7 மாத இழுபறிக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் உற்சாக குத்தாட்டம் போட்டு வருகின்றனர்.
அதிமுக தலைமை அலுவலகம் வந்த ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் இரட்டை இலை சின்னம் கிடைத்ததை ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்குவதாக ஓ.பிஎஸ், ஈபிஎஸ் அணி அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்த முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதே போன்று எம்ஜிஆர், அண்ணா நினைவிடத்திலும் இருவரும் மலர் அஞ்சலி செலுத்தினர். அதிமுகவினர் வருகையையொட்டி ஜெயலலிதா சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, சரோஜா, நிலோபர் கபில், சி.வி.சண்முகம் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர். முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோரும் ஜெயலலிதா சமாதி முன்பு அஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள் இல்லை