ஆட்சி கவிழ்ப்போம் என்று நினைத்த எதிர் கட்சியின் கனவு தவிட்டு பொடியானது
இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதன் மூலம், ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடி கிடைத்திருப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
இரட்டை இலை சின்னத்தை இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணிக்கு ஒதுக்கிய தலைமை தேர்தல் ஆணையம், அஇஅதிமுகவின் பெயரை, வழக்கம்போல் பயன்படுத்தலாம் எனக் கூறியது. இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் களைகட்டின. கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்த முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், அவை தலைவர் மதுசூதனன், கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களோடு ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, தேர்தல் ஆணைய தீர்ப்பு குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இரட்டை இலைச் சின்னத்தை கைப்பற்றி, ஆட்சியை கலைக்க நினைத்தவர்களுக்கு, தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு சம்மட்டி அடி போல் அமைந்திருப்பதாக கூறினார்.
தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு, சோதனை காலம் முடிவுற்று, விடிவு காலம் பிறந்திருப்பதை கட்டியங்கூறுவதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்று மலர்கள் தூவி மரியாதை செய்தனர். இதனைத் தொடர்ந்து, அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர், முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா ஆகியோரது நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினர்.







கருத்துகள் இல்லை