Header Ads

  • சற்று முன்

    நீங்கள் எதற்காக வாழ்கிறீர்கள்?

    பூமி! எப்போதும் சுற்றிக்கொண்டேயிருக்கிறது. எங்கோ, எப்போதோ நிகழ்ந்த ஒரு பெருவெடிப்பின் காரணமாகத் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, நாம் உயிர்கள் என்று கருதக்கூடியவற்றை படிப்படியாக தன்னகத்தே வளரவிட்டிருக்கிறது. எல்லாவற்றையும் தன்னிலிருந்தே கொடுத்து பின் அதன் வடிவத்தை மட்டும் மாற்றி தன்னுடனேயே வைத்துக்கொள்கிறது. உயிர்களை உருவாக்கித் தன் பருவ மாற்றங்களினால் அவற்றின் பரிணாமத்தை வளர்த்தெடுத்துப் புதுப்புது உயிரினங்களையும் அறிவில் மேம்பட்ட உயிரினங்களையும் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது.அறிவு என்பது அதன் வாழ்க்கையை, சந்தததியைப் பூமியில் பெருக்குவதிலும், நிலைநிறுத்துவதுமே என்று கருதப்படுகிறது. எல்லா உயிர்களும் ஒன்றென்றாலும் உருவத்திலும், செயலிலும் மாற்றத்தைக் கொடுத்து, ஒன்றோடொன்றைச் சார்ந்தே வாழச் செய்கிறது. உண்மையில் ஒரு உயிரின் அழிவே மற்றோர் உயிரின் உணவுக்கு வழிவகுக்கிறது. இங்கு எந்த உயிரும் தன்னிச்சையாகவோ, நிலையாகவோ வாழ்வது இல்லை. எல்லா உயிர்களும் மனிதன் உட்பட எதற்காகவோ வாழ்கின்றன. வாழ்ந்தாகவேண்டிய கட்டாயமும், தன் சந்ததியை நிலைக்கச் செய்வவேண்டிய கட்டாயமும் எல்லா உயிர்களின் மரபணுக்களிலும் பதிக்கப்பட்டுள்ளது. 

    உயிர்கள் பிறக்கின்றன; வாழ்கின்றன; மடிகின்றன. எதற்காகப் பிறந்தன என்பது மட்டும் ரகசியம். இனி கட்டுரைக்குள் செல்வோம்
    பூமியென்னும் இந்தக் கோளப்பந்தில் ஒட்டியபடி அதன் பயணத்தில் தனது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான உயிர் வகைகளில் மனிதனும் ஓர் வகை. எல்லா உயிர்களுக்கும் மேலானவன் என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் ஒர் அபூர்வ வகை. உண்மையில் எறும்பு கூட ஓர் அபூர்வ வகைதான். எல்லா உயிர்களிலுமே ஓர் அபூர்வம் இருக்கத்தான் செய்கிறது. மனிதனும் எல்லா உயிர்களைப் போலவே பிறக்கின்றான்; உண்கின்றான்; மடிகின்றான். எதற்காகவோ பிறந்தான், எப்படியோ வாழ்ந்தான். எல்லாவற்றைப் போலவே இறந்தும் போகிறான். மனிதன் தன்னைத் தானே சிறந்தவன் என்று கூறிக்கொண்டான். எல்லா உயிர்களுக்கும் தனக்குத் தெரிந்த மொழியில் பெயர் வைத்தான். எல்லா உயிர்களையும் அடிமைப்படுத்த நினைத்தான். மனிதன் தவிர மற்ற உயிர்கள் உணவிற்காக மட்டுமே இன்னொரு உயிரைக் கொல்லுகின்றபோது மனிதன் மட்டுமே தன் சந்தோசத்திற்காக, பொழுதுபோக்கிற்காக,கோபத்திற்காகப் பழிவாங்கும் ஓர் அபூர்வ உயிரினம். உலக விலங்குகளிலேயே மிகக் கொடூரமான விலங்கு மனிதன் மட்டுமே.
    இயற்கையின் பரிணாம வளர்ச்சியில் எங்கோ, எப்போதோ தனது முடிகளையும், வாலினையும் இழந்த ஒரு குரங்கு தன் இனத்திலிருந்து பிரிந்து வாழத்தொடங்கியது. தன் உருவத்தை வைத்து பிற உயிரினங்களிலிருந்து தன்னை வேறுபடுத்திக்கொண்டது. ஆனால் அதன் குண நலன்கள் விலங்கைப்போலவே இருந்தன. எங்கோ காடுகளிலும், மலைகளிலும் பழங்களையும், பச்சை மாமிசத்தையும் உண்டபடி வாழ்ந்த விலங்கானது படிப்படியாகச் சிந்திக்கத் தொடங்கி பல புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தித் தனது உடலை வருத்திக் கொள்ளாமல் தனக்கான உணவினை உருவாக்கத் தலைப்பட்டது. விலங்காக இருந்த சமயங்களில் உணவு தேடவே அதிக நேரத்தைச் செலவிட்டபடியால் சிந்திக்க நேரமில்லாதிருந்த அந்த விலங்கிற்குப் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் உணவினை எளிமையாகப் பெற முடிந்ததால், மீதமுள்ள நேரத்தில் சிந்திக்கத் தொடங்கி தன் பிறப்பின் ரகசியத்தையும், பிரபஞ்சத்தையும் ஆராயத் தொடங்கியது. தன்னை மட்டுமல்லாது பிற உயிர்களையும் ஆராயத் தொடங்கி அவற்றிலிருந்து தான் மேம்பட்டவன் என்பதையும் கண்டுகொண்டது. தான் மேம்பட்டவன் என்று எண்ணத் தொடங்கியதுமே பிற உயிர்களை அடக்கி ஆளும் எண்ணமும் அதன் மரபணுக்களில் பதிய ஆரம்பித்துவிட்டது.
    எப்படி எப்படியோ வாழத் தொடங்கிய மனித மிருகம் தன்னையும், பிற உயிர்களையும் பகுத்தறிந்து அவற்றை தன் வசதிக்காக பெயரிட்டு, வகைப்படுத்திக் கொண்டது. அதே சமயம் அவற்றைத் தனது தேவைக்காகவும் பயன்படுத்தத் தொடங்கியது. பிற உயிர்களை மட்டுமே அடிமைப்படுத்திக் கொண்டிருந்த அதே வேளையில் தனது இனத்திலும் தன்னைவிட ஏதாவதொரு விதத்தில் குறைந்த ஆற்றலுள்ள பிற மிருகங்களையும் அடிமைப்படுத்தத் தொடங்கியது. அதற்கான காரணங்களையும் பட்டியலிட்டு அடக்கியாண்டது. மற்ற உயிரினங்கள் அதனதன் மரபணுவில் சேமிக்கப்பட்ட உணர்வுகளின் அடிப்படையில் வாழ்ந்துகொண்டிருந்தபோது, மனிதன் மட்டும் சிறிது சிறிதாக தன் அறிவினைப் பெருக்கி தன் மரபணுவில் சேமிக்கத்தொடங்கி, மேலும் மேலும் அறிவாளியாகத் தன்னை மாற்றிக்கொண்டான். அதேசமயம் தனக்காக எல்லைகளை வகுத்துக்கொண்டு, ஒரு கோட்டிற்குள் நின்று வாழவும் தன்னைத் தானே நிர்பந்ததப்படுத்திகொண்டான். ஒருவேளை அந்த எல்லைக் கோட்டினை மனிதன் ஏற்படுத்திக்கொண்டிராவிட்டால் எல்லா உயிர்களைப் போலவே அவனுக்கும் உணவு உண்டுவிட்டு, தன் சந்தததியைப் பெருக்குவது மட்டுமே பிரதானமாக இருந்திருக்கும்.
    அறிவு மிகுதியால் மேலும் மேலும் சிந்தித்துத் தனக்கு மேலே ஒன்று இருப்பதாக நினைத்துக் கடவுளைப் படைத்தான். இக்கட்டான, தனக்குப் புரியாத, தன் அறிவுக்கு எட்டாத விசயங்களைக் கடவுளுடன் சம்பந்தப்படுத்தி தற்காலிகமாக சில பிரச்சினைகளைத் தள்ளிப்போட்டுக்கொண்டான். ஆனால் தனது மரபணுவில் சேமிக்கப்பட்ட குழப்பங்களை அவனது அடுத்த சந்ததி யோசிக்கத் தொடங்கியது. அதன் மூலமாகவும் பல புதியவற்றைக் கண்டுகொண்டது. சிலவற்றை மூட நம்பிக்கை என்றும் கூறி மனிதன் போட்டுக்கொண்ட கோட்டினைத் தாண்டவும் முயற்சி செய்தான். தானே சிறந்தவன் , தான் சொல்வது எல்லாமே சிறந்தது என்ற எண்ணம் மனிதனாகப் பிறந்த எல்லோரது மரபணுவிலும் சேமிக்கப்பட்டே இருக்கிறது. தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவும், தன்னைப் பிறர் பாராட்டவும் எல்லாவிதமான முயற்சிகளையும் அன்றிலிருந்து இன்றுவரை எடுத்துக்கொண்டே இருக்கிறது மனித இனம். பூமியில் எதற்காக வாழ்கிறோம் என்பதை அறியாமலேயே இங்கே நீண்ட நாட்கள் வாழ்வதற்காகவும், தன்னையும் தனது சந்ததியையும் நிலை நிறுத்துவதற்காகவும் அனேக முயற்சிகளையும், சண்டைகளையும் செய்துகொண்டேயிருக்கிறது மனித இனம்.

    இந்தக் கட்டுரையில் நான் பார்த்த, பார்த்துக் கொண்டிருக்கும், என்னுடன் வாழ்ந்த , வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களைப் பற்றி நான் உணர்ந்த உளவியல் விசயங்களை மட்டுமே எழுதப்போகிறேன். இந்தக் கட்டுரையின் நோக்கம் என்று எதுவுமில்லை. எதை நோக்கிப் பயணிக்கிறதோ அதன் பாதையில் அதுவாகப் போய்க்கொண்டேயிருக்கட்டும்! உளவியல் பற்றி எனக்கு அதிகப் பரீட்சையம் இல்லாவிட்டாலும் நான் உணர்ந்த என் உணர்வுகளின் தொகுப்பாக, மனிதர்களை பற்றிய என் எண்ணங்களின் தொகுப்பாக இந்தத் தொடர் அமையும். இறுதியாக உங்களிடம் ஒரே ஒரு கேள்வியுடன் இந்தக் கட்டுரையின் இந்தப் பாகத்தை நிறைவு செய்கிறேன். அதற்கான பதிலையும் உங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் நன்றியுடன் எதிர்பார்க்கிறேன். அந்தக் கேள்வி : “ நீங்கள் எதற்காக வாழ்கிறீர்கள்? “

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad