சிந்துபாத் கதையாக வருமானவரி சோதனை
கடந்த 9-ம் தேதி ஆரம்பித்த வருமான வரித்துறை சோதனை இன்று ஐந்தாவது நாளாக பல இடங்களில் தொடர்கின்றன. இன்று சோதனை நிறைவு பெறலாம் என்று கூறப்படுகிறது.
தமிழகம் முழுதும் உள்ள சசிகலா, தினகரன், திவாகரன், விவேக் மற்றும் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில் கடந்த 9-ம் தேதி அதிகாலை 5-30 மணிக்கு ஆரம்பித்த வருமான வரித்துறை சோதனை, 5 வது நாளாக இன்று வரை தொடர்கிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் சொத்துக்களை கணக்கிடும் பணி இன்றும் நடந்து வரும் நிலையில் இன்றும் சோதனை தொடர்கிறது.
ஜெயா டிவி அலுவலகத்தில் 100 மணி நேரமாக வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை காலை 5.30 மணிக்கு ஆரம்பித்த சோதனை 100 மணி நேரமாக இன்றும் நடைபெற்று வருகிறது. இந்தச் சோதனைகளில் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிடாஸ் மது பான ஆலையில் 9 ம் தேதி முதல் ஐந்தாவது நாளாக சோதனை தொடர்கிறது. மிடாஸ் முக்கிய நிர்வாகி காமராஜ் மற்றும் சில ஊழியர்களை விசாரித்து வருகின்றனர். டே நைட், அரேபியன் டிரம் முதலான மிடாஸ் கம்பெனி மது வகைகள், அரசு மது பானக் கடைகளுக்கு அதிக அளவில் சப்ளை செய்யப்படுகிறது.
இரவு 1.00 மணிக்கு முடியும் வருமான வரித்துறை சோதனை, மீண்டும் அதிகாலையில் துவங்குகிறது. ஆயிரக்கணக்கான ஆவணங்கள் இதில் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிருஷ்ணப்பிரியா இல்லம், ஜெயா டிவி, நமது எம்ஜிஆர், ஜாஸ் சினிமாஸ் முதலான இடங்களில், ஐந்தாவது நாளாக சோதனை நடத்தப்படுகிறது. விவேக் வீட்டிலும் ஐந்தாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. கொடநாடு கர்சன் எஸ்டேட்டிலும, புதுவை லட்சுமி ஜுவல்லரியிலும் விசாரணை முடிந்து, கணக்கிடும் பணிகள் நடக்கின்றன.
ஆவணங்கள் சிக்கும் போது, அதில் கிடைக்கும் கூடுதல் தகவல்களை வைத்து மேலும் நடவடிக்கை எடுக்கும் விதமாக, வருமான வரித்துறை அதிகாரிகள் அடுத்தகட்ட விசாரணைக்கு செல்கின்றனர். இதனால் சோதனை நிறைவு பெறாமல் தொடர்வதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோதனை இன்று அல்லது நாளை நிறைவுப் பெற்றாலும் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள், நகை, பணம், அசையும், அசையா சொத்துகள் மதிப்பு குறித்து இப்போது கூறப்படும் அத்தனையும் யூகங்களே என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை