ஆர்.கே.நகர் தொகுதியில் 5 முனை போட்டி உறுதி
சென்னை : ஆர்.கே நகர் தொகுதியில் தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கியுள்ள நிலையில் தற்போதைய அரசியல் சூழலில் அங்கு 5 முனை போட்டி உறுதியாகத் தெரிகிறது. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு கடந்த 11 மாதங்களாக சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி காலியாக உள்ளது. இந்த தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்ட தேர்தலும் பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து இடைத்தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 31ம் தேதிக்குள் தேர்தலை நடத்த உத்தரவிட்டனர். இந்நிலையில் டிசம்பர் 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கின
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து ஆர்.கே நகர்த் தொகுதியில் தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. இடைத்தேர்தல் அதிகாரியாக ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குனர் வேலுச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் ஆர்.கே நகர்த் தொகுதிக்குள் வைக்கப்பட்டுள்ள அரசு விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. அரசு மற்றும தனியார் கட்டிடங்களில் அரசியல் கட்சியினரோ அல்லது பொதுமக்களோ சுவர் விளம்பரங்கள் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர் யார்?
இதனிடையே இடைத்தேர்தலில் பிரதான கட்சியான அதிமுக இரட்டை இலை சின்னத்தை பெற்ற மகிழ்ச்சியுடன் களமிறங்குகிறது. அந்தக் கட்சியின் வேட்பாளர் யார் என்பதை ஆட்சி மன்றக் குழு அறிவிக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதே போன்று திமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான திமுகவின் கூட்டமும் நடைபெற்று வருகிறது. திமுகவிற்கு காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பெருந்தலைவர் காமராஜர் கட்சி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
5 முனை போட்டி தயாராகியுள்ளது
நாம் தமிழர் கட்சியும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளது. எனவே தற்போதைய சூழலில் 5 முனை போட்டி உருவாகியுள்ளது. தேமுதிக இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி,பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தங்களது முடிவை அறிவிக்காததால் அந்தக் கட்சிகளும் களத்தில் இறங்கினால் போட்டி மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
கருத்துகள் இல்லை