அப்போ குட்கா பாஸ்கர் இப்போ டெங்கு பாஸ்கர் - அமைச்சரை கலாய்க்கும் ஸ்டாலின்
அப்போ குட்கா பாஸ்கர் இப்போ டெங்கு பாஸ்கர் - அமைச்சரை கலாய்க்கும் ஸ்டாலின்
சென்னை: குட்கா பாஸ்கர் என்று அமைச்சர் விஜயபாஸ்கரை விமர்சித்து வந்த ஸ்டாலின், இப்போது டெங்கு பாஸ்கர் என்று விமர்சித்துள்ளார். தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று அவரது சொந்தத் தொகுதியான கொளத்தூருக்குச் சென்று பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஸ்டாலின், ஏறக்குறைய ஓராண்டாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லை. என் தொகுதிக்கு மட்டுமல்ல, மொத்த மாநிலத்துக்கும் அதேதான் நிலைமை. இதுவரை அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது வேதனைக்குரியது. இதனால்தான், பருவமழை தொடர்பான பணிகள் முடுக்கிவிடப்பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளேன். வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பேரிடர்களை எதிர்கொள்ளவும் பொதுமக்களை காக்கவும் திமுகவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளேன் என்று கூறினார். இரட்டை இலைச் சின்னம் அளிக்கப்பட்ட பிறகுதான் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்படுகிறதே' என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அப்படி நடந்தால் அதைவிட ஒரு ஜனநாயகப் படுகொலை இருக்க வாய்ப்பே இல்லை. ஆர்.கே. நகரில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதால்தான் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. அப்போது அ.தி.மு.கவினர் பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதுகுறித்து இன்று வரை முறையான விசாரணை நடைபெறவில்லை. குட்கா பாஸ்கர்... மன்னிக்கவும் டெங்கு பாஸ்கர் உள்பட பலர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறினார்.
கருத்துகள் இல்லை