Header Ads

  • சற்று முன்

    இலங்கை : தனி உள்ளுராட்சி சபை கோரி முஸ்லிம்கள் கடையடைப்பு

    இலங்கையில் அம்பாரை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேச முஸ்லிம்களினால் முன் வைக்கப்பட்டுள்ள தங்கள் பிரதேசத்திற்கு தனியான உள்ளுராட்சி சபை தேவை என்ற போராட்டம் தொடர்ந்து வலுப் பெற்று வருகின்றது.
    அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் நாடு தழுவியதாக உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இந்த போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது.
    இன்று திங்கட்கிழமை அந்த பிரதேசத்தில் முழு நாள் கடையடைப்பு, அனுஷ்டிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த பிரதேசத்தின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.
    நாளை மறுதினம் புதன்கிழமை வரை தொடர்ந்து மூன்று நாட்கள் கடையடைப்பு தொடரும் என ஏற்பாட்டாளர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
    சாய்ந்தமருது பிரதேச பள்ளிவாசல்கள் நிர்வாகம், உலமா சபை மற்றும் பொது அமைப்புகள் கூடி இது தொடர்பான தீர்மானத்தை எடுத்திருந்தன.
    இலங்கை
    சாய்ந்தமருது பிரதேசத்தில் அனுஷ்டிக்கப்படுகின்ற கடையடைப்பு போராட்டம் காரணமாக அனைத்து கடைகளும் தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. அரசாங்க வங்கிகள் மற்றும் பாடசாலைகள் இயங்கவில்லை. வீதிகளிலும் பொது இடங்களிலும் கறுப்பு கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன.
    அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் குடியிருப்புகளை மட்டும் கொண்ட தனித்துமான முஸ்லிம் பிரதேசங்களில் ஒன்றாக விளங்கும் சாய்ந்தமருது பிரதேசம் அம்மாவட்டத்தில் ஒரு வர்த்தக நகரமும் ஆகும்.
    சிவில் நிர்வாகத்தை மையப்படுத்தி தனியான பிரதேச செயலகத்தையும் கொண்டுள்ள போதிலும் உள்ளுராட்சி நிர்வாகம் கல்முனை மாநகர சபையின் கீழ் உள்ளது.
    நாட்டில் ஏனைய பிரதேசங்களில் பிரதேச செயலகங்களை மையப்படுத்தியே அநேகமான உள்ளுராட்சி சபைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அது போன்று தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே சாய்ந்தமருது பிரதேச முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகும்.
    தங்கள் பிரதேசத்திற்கு தனியான பிரதேச செயலகம் கிடைத்த காலம் தொடக்கம் தனியான உள்ளுராட்சி சபை தேவை என்ற கோரிக்கையை பல வருடங்களாக அவர்கள் முன் வைத்து வருகின்றனர்.
    இந்த கோரிக்கை தொடர்பாக ஏற்கனவே அதிகாரத்தில் இருந்த மற்றும் தற்போது அதிகாரத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் உட்பட முஸ்லிம் அரசியல் தலைவர்களினால் தேர்தல் காலங்கள் உட்பட பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்களுக்கு உறுதிமொழிகளும் உத்தரவாதங்களும் வழங்கப்பட்டிருந்ததாக போராட்ட ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்படுகின்றது.
    பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க , உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா ஆகியோரும் தமது பிரதேசத்திற்கு வருகை தந்திருந்த வேளை இது போன்ற உறுதிமொழிகளையும் உத்தரவாதங்களையும் வழங்கியிருந்தாகவும் கூறப்படுகின்றது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad