• சற்று முன்

    உத்திரமேரூர் அருகே அறுவடை செய்த நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் வேதனை 1.5 லட்சம் சிப்பம் நெல்மணிகளுடன் தவிப்பு;


    உத்திரமேரூர் அருகே அறுவடை செய்த நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் வேதனை 1.5 லட்சம் சிப்பம் நெல்மணிகளுடன் தவிப்பு; நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கலெக்டரிடம் கோரிக்கை

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளதால், சுமார் 1.5 லட்சம் சிப்பம் நெல்மணிகளுடன் விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில், உத்திரமேரூர் வட்டார விவசாயிகள் சங்க தலைவர் ஜி.இரவிச்சந்திரன் தலைமையில் விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் சினேகாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    உத்திரமேரூர் வட்டத்துக்கு உட்பட்ட அரும்புலியூர், களியப்பேட்டை, கரும்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது அறுவடை பணிகள் முடிந்து ஒரு மாதத்துக்கும் மேலாகிறது எனவும் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்வதற்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் ஏற்கனவே 3, 4 முறை கடிதம் மூலமாகவும், நேரிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் அவ்வப்போது பெய்யும் மழையால் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் சேதமடைந்து வருகின்றன. மேலும், ஒரு மாதத்துக்கும் மேலாக நெல்மணிகள் கொள்முதல் செய்யப்படாமல் இருப்பதால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். இதுவரை விவசாயிகளின் நெல் இருப்பு குறித்து ஆய்வு செய்ய ஒரு அதிகாரி கூட நேரில் வந்து பார்வையிடவில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

    தற்போது சுமார் 1.5 லட்சம் சிப்பம் அளவுக்கு கொள்முதல் செய்ய வேண்டிய நெல்மணிகளை வைத்துக்கொண்டு, எப்போது கொள்முதல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்திருக்கின்றனர். நெல் கொள்முதல் செய்யப்படுமா, இல்லையா என்ற அச்சமும் விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.

    எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக அமைத்து, விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad