Header Ads

  • சற்று முன்

    சவுக்கு சங்கர் கைது சரியா? மூத்த பத்திரிக்கையாளர் இளசை கணேசன் நேர்காணல்: எடுத்தவர் ஐஸ்வர்யன்

    கேள்வி

    சவுக்கு சங்கர் கைது மக்களிடம், பத்திரிகையாளர்களிடம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது?

    பதில்: 

    முதலில் சவுக்கு சங்கர் பத்திரிக்கையாளர் அல்ல. எந்தப் பத்திரிக்கையிலும் பணியாற்றியதும் கிடையாது. அவர் ஒரு யூடியூபர். இவரின் கைது பத்திரிக்கையாளர்களிடம் மூன்று வகையாக 

    1 இவருக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் என்றவாறு கைதுக்கு ஆதரவான விளைவு.

    2, சவுக்கு சங்கர் கைதுக்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் கண்டு கொள்ளாமல் கடந்து போகும் போக்கு.

    3. சிறிய அளவிலான ஆதரவு கருத்துக்கள். - என்றவாறு விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

    பத்திரிக்கையாளர்கள் மத்தியிலே இத்தகைய நிலைமை  என்கிற போது பொதுமக்கள் மத்தியில் என்ன விளைவை ஏற்படுத்தப் போகிறது!

    கேள்வி 

    கருத்துக் கூறும் ஜனநாயகம்,  பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றின் மீது அரசு தாக்குதல் என்று விமர்சிக்கப்படுவது குறித்து

    பதில்

    கருத்து கூறும் ஜனநாயகம், பத்திரிக்கை சுதந்திரம் இரண்டும் யாரும் கொடுத்ததல்ல. போராடி பெற்ற உரிமைகள் ஆகும். இவற்றை நிலை நிறுத்துவதற்கு தொடர்ந்து போராடியாக வேண்டும்.

    கருத்து சுதந்திரத்தில் எது கருத்து? என்பது மிக முக்கியம. கருத்து என்பதற்கும்‌ நோக்கம் இருக்கிறது.!

    முதலில் பத்திரிகையாளன் யார்? என்பதை தெரிந்து கொண்டால் தான் அவனிடம் எத்தகைய கருத்துக்கள் வெளிவர வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடியும்! பத்திரிகையாளன் என்பவன் நான்கு முக்கிய அடிப்படைகளை கொண்டிருக்க வேண்டும்.

    1. சமுதாயப் பொறுப்புள்ளவன்.

    2. பத்திரிக்கையாளன் மற்றும் பத்திரிக்கை துறை, முன்னேற்றத்திற்காகவும் அதன் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும் போராடுபவன்.

    3.போராடும் பத்திரிக்கையாளர் மீது தாக்குதல் மற்றும் அடக்குமுறையை எதிர்த்து நிற்காவிட்டாலும் அவற்றை ஆதரிக்காமல் இருப்பவன்.

    4. எந்த சூழ்நிலையிலும் பணத்திற்கு விலை போகாதவன். கருத்து  தகவல்களை காசுக்கு விற்காதவன். இந்த நான்கு அடிப்படைகளும் ஒவ்வொரு பத்திரிகையாளர்களிடமும் இருக்க வேண்டும்.

    அடுத்து பத்திரிகையாளன் சமுதாயப் பொறுப்புள்ளவன் என்பதில் மூன்று அம்சங்கள் உள்ளன.

    * சமுதாயத்தை அறிந்து கொள்பவன்

    * சமுதாயத்தை பயிற்று விப்பவன்

    * சமுதாயத்தை மாற்றியமைப்பவன்.

    இந்த மூன்றும் பத்திரிகையாளர்களின் உணர்வோடு ஒன்றியவை ஆகும். எனவே அவன் சிந்தனையில் இருந்து வாய் வழியாக வரும் கருத்துக்கள் இந்த அடிப்படையில் இருக்க வேண்டும். இதிலும் கூட சமுதாயத முன்னேற்றத்திற்கான  கருத்துக்களை தகுந்த ஆதாரத்தோடு நேர்மையாக வெளியிட வேண்டும்.கிடைத்த தகவல்கள் சரியானதுதானா? என்பதை தகுந்த ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் சமுதாய முன்னேற்றத்திற்கான விளைவுகளை ஏற்படுத்துமா? என்பதில் தெளிவு வேண்டும்.

    அடுத்து கருத்து என்பது யாருக்கானது  என்பதில்தான் அதன் நோக்கம், முக்கியத்துவம் இருக்கிறது. வெளிப்படுத்தும் கருத்து தனக்கானதா? அல்லது சமுதாயத்திற்கானதா? என்பதுதான் கருத்தின் முக்கியத்துவம் ஆகும்.பொதுவாக சமுதாயத்திற்கானது என்று கூறி தப்பித்து விட முடியாது.

    சமுதாயத்திற்கானது என்றால்இரண்டு வர்க்கங்களாக பிளவு பட்ட சமுதாயத்தில் கருத்து என்பது எந்த வர்க்கத்திற்கானது? என்பதே கருத்தின் முக்கிய அடிப்படை.

    1.ஒட்டச் சுரண்டப்படும், ஒடுக்கப்பட்ட ஏழை,எளிய உழைக்கும் மக்களுக்கான கருத்தா? 

    2. உழைக்கும் மக்களின் உழைப்பைச் சுரண்டி மூலதனத்தைக் குவிக்கும் முதலாளிகளுக்கு ஆதரவான கருத்தா?

    இந்த இரண்டு வர்க்கங்களில்  எடுத்து வைக்கும் கருத்து எந்தப் பக்கம்? என்பதில் பத்திரிக்கையாளர்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

    கேள்வி 

    சவுக்கு சங்கர் எழுப்பும் கருத்துக்கள் தகவல்கள் உழைக்கும் வர்க்கத்திற்கான கருத்துகளா?

    பதில்:

    சங்கர் எழுப்பும் கருத்துகள் உழைக்கின்ற ஏழை எளிய மக்களுக்கான கருத்தாக இருக்கவில்லை. உதாரணத்திற்கு ஒரு சிலவற்றை பார்ப்போம்.

    * முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதைப் போன்று  சவுக்கு சங்கரின் முதல் வெளிப்பாடு என்பதே உயர் அதிகாரிகளின் உரையாடல்களை ஒட்டுக் கேட்பதாக அமைந்தது.

    * அரசு ரகசியமாக பராமரிக்க வேண்டியதை குறுக்கு வழியில் தேடி பொதுவெளியில் வெளியிட்டார்

    * கள்ளக்குறிச்சி மாணவி பாலியல் கொலை சம்பவத்தில் மாணவிக்கு ஆதரவாக நிற்காமல் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக இருந்தார்.

    * தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் துப்பாக்கி சூட்டிற்கு ஆதரவாக குரல் எழுப்பினார்.

    * சேலம் ஆத்தூரில் இரண்டு ஏழை தலித் விவசாயிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்க்காமல் ஆதரித்தவர்.

    * தற்போது சவுக்கு சங்கர் எழுப்பி இருக்கும் கருத்து சனாதன அடிப்படையில் ஒட்டுமொத்த பெண்‌ காவலர்களை குறிக்கும் வகையில் ஆணாதிக்க வக்கிர வெளிப்பாடாக அமைந்துள்ளது.

    அரசுத் துறையில் பதவி உயர்வு என்பதற்கு‌ ஒரு வரைமுறை இருக்கிறது. பதவி உயர்வில் 10  இடங்கள் காலி என்றால் சீனியாரிட்டி அடிப்படையில் 15 பெயர் பட்டியல் அறிவிக்கப்படும். பட்டியலில் கருத்துக்கூறுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு இதிலிருந்து 10 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    இந்த முறையில் தவறு நடந்தால் அதை சுட்டிக் காட்டலாம். புகார் பதிவு செய்யலாம்!  தேர்வு செய்யும் முறையில் மாற்றம் வேண்டும் என்றால் அதை ஒட்டி கருத்து தெரிவிக்கலாம். ஆனால் இது எதையும் செய்யாமல் பதவி உயர்வை பாலியலோடு சம்பந்தப்படுத்தி பேசுவது வண்ணமும் அக்கிரமும் தவிர வேறு என்ன?

    சவுக்கு சங்கர் கருத்துகளின்‌ பின்னணி எது என்று புரிகிறதா?

    வாயில் வருபவை எல்லாம் கருத்துக்கள் என்று கூறி விடக்கூடாது. ஆதாரமற்ற அவதூறுகள், பொய்கள், வன்மங்கள், வக்கிரங்கள், மிரட்டல்கள், திரித்தல், திசை திருப்பல் போன்றவை கருத்துக்கள் என்பதில் இடம் பெறாது.இத்தகைய கருத்துக்களை இழிவான மலிவான கெச்சையான சொற்களால் கூறப்படுவது பத்திரிக்கை துறையின் நம்பகத்தன்மையை சீர்ழிக்கும் போக்காகும்.

    கேள்வி 

    கருத்துக்‌கூறும் ஜனநாயகம், பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றுக்கு கட்டுப்பாடு என்று ஏதும் உண்டா?

    பதில்:

    எல்லாவற்றிற்கும் கட்டுப்பாடு என்று இருப்பதை போன்று

    கருத்துக் கூறும் ஜனநாயகம், பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றுக்கும் எல்லை, வரம்பு, கட்டுப்பாடு உண்டு. மனித உரிமை என்பதற்குக் கூட கட்டுப்பாடு வரம்பு உண்டு. கட்டுப்பாடு என்பதை அடக்குமுறை என்று புரிந்து கொள்ளக்கூடாது. மாறாக அதை 'ஒழுங்குமுறை' என்று புரிந்து கொள்ள வேண்டும். இவை சுய ஒழுங்குமுறை, சமுதாய ஒழுங்கு முறை என்றவாறு அமைய வேண்டும் எல்லையற்ற, கட்டுப்பாடற்ற,  வரம்பு மீறிய பத்திரிக்கை சுதந்திரம், கருத்து கூறும் ஜனநாயகம் என்று ஏதுமில்லை.

    கேள்வி 

    இந்த நிலை மற்ற பத்திரிகையாளர்களுக்கும் நாளை வரலாம் என்று பெலிக்ஸ் ஜெரால்ட் குரல் எழுப்பியது குறித்து கூறுங்கள்.


    பதில்:

    வரும்! வரட்டும்! எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம்!

    பத்திரிக்கை துறைக்காக, சமுதாயத்திற்காக போராடும் எவருக்கும் எந்த நேரத்திலும் அடக்குமுறைகள் வரும் என்பதும்‌அதை எப்படி எதிர்கொள்வது என்பதும் அவருக்குத் தெரியும்.

    போராளிகள் யாரும் போர்க்களத்தில் புலம்ப மாட்டார்கள்! திமிர் எடுத்த நரி வெள்ளரித் தோட்டத்தில் தனது வாலை இழந்து விட்டு," நாளை மற்ற நரிகளுக்கும் இந்த நிலை வரலாம்" என்று கூறுவதைப் போன்று இருக்கிறது.

    அதானியின் சொத்து குவிப்பு பற்றி இண்டன் பார்க் வெளிப்படுத்திய போது இதை திசை திருப்பும் வகையில் 'இந்தியாவின் மீது தாக்குதல்' என்று தேசியத்திற்குள் புகுந்து கொண்டார் அதானி. இதைப் போன்று தான் சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஆகியோரின் நடவடிக்கை இருக்கிறது.

    * எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போலக் காட்டிக்கொண்டு,..

    * ஊடகத்துறையின்  சர்வாதிகாரி போல் நடந்து கொண்டு...

    * திமிர் எடுத்து, தெனாவெட்டாக, தரம் தாழ்ந்து பேசி...

    * தன் தலையிலே தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டு..

    தண்டனை என்று வரும்போது பத்திரிக்கையாளர் போர்வைக்குள் ஒளிந்து கொள்வதை ஏற்க முடியாது.

    கேள்வி -

    பத்திரிக்கையாளர்களுக்கும் திமுக அரசுக்குமான போராட்டம் என்று விமர்சிக்கப்படுவது குறித்து 

    பதில்:

    இது ஒருவகையான திசை திருப்பும் முயற்சி ஆகும்.

    சவுக்கு சங்கர் விசயத்தில் அரசு முன்பே இதை செய்திருக்க வேண்டும்.இவரின் முதல் சம்பவத்தின் போதே ஆறு மாதத்திற்குள் பணி நீக்கம் செய்து உரிய தண்டனை வழங்கியிருக்க வேண்டும். அரசு இதை செய்யத் தவறிவிட்டது. கைது செய்யக்கூடிய நிலையை உருவாக்கியவர் சவுக்கு சங்கர். தாமதம் ஆனாலும் தகுந்த நேரம் பார்த்து கைது‌‌ செய்தது அரசு.

    பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் ஆதரவை பெறுவதற்காகவே இதை பத்திரிக்கையாளர்களுக்கும் திமுக அரசுக்குமான‌ போராட்டமாக சித்தரிக்கிறார்கள்.

    கேள்வி 

    பத்திரிக்கையாளர் பத்திரிகைத்துறை பாதிப்பிற்கு சவுக்கு சங்கர் பெலிக்ஸ் குரல் கொடுத்திருக்கிறார்களா.?

    பதில்:

    பாஜக மோடியின் பத்தாண்டு ஆட்சியில் இதுவரையில் இல்லாத அளவுக்கு பத்திரிக்கையாளர்களும் ஊடக நிறுவனங்களூம் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகின.

    * பிபிசி

    * தி வயர்

    * காஷ்மீர் வாலா

    * தி ஸ்லக்ரோல்

    * நியூஸ் லாண்டரி

    * பாரத் சமாச்சார்

    * நியூ ஸ் கிளிக்

    * புதிய தலைமுறை

    போன்ற ஊடக நிறுவனங்களும் இவற்றோடு சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்களும்  கடுமையான அடக்குமுறைக்கு ஆளானபோது புலனாய்வு புலி சவுக்கு சங்கரும் கூட்டாளி பெலிக்ஸ் ஜெரால்டும் எங்கே போனார்கள்?

    அமெரிக்காவின் ராணுவ மேலாதிக்கத்தை, அத்துமீறர்களை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ் பத்திரிக்கை ஆசிரியர் ஆசாஙஜெ‌ உயிருக்கு அமெரிக்கா வலை வீசிய போது உலகமே கண்டித்தது. இவர்கள்  எங்கே போனார்கள்?

    பிரபல மூத்த பெண் பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் மற்றும் பகுத்தறிவு கருத்துக்களை பரப்பி வந்த நரேந்திர தபோல்கர் ஆகிய இருவரும் மோடி ஆட்சியில் ஒரே மாதிரி கொல்லப் பட்டார்கள். இவர்களின் படுகொலைக்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்தது.

    இவர்கள் எங்கே போனார்கள்?

    பத்திரிகை நிறுவனங்களும் பத்திரிக்கையாளர்களும் அடக்கு முறையால் பாதிக்கப்பட்ட போது அடக்குமுறைக்கு எதிராக இவர்கள் குரல் எழுப்பவில்லை.மாறாக பத்திரிகையாளர்களுக்கு எதிரான குரலையே எழுப்பி வந்தவர்கள் இவர்கள்.மூத்த பெண் பத்திரிகையாளரருக்கு எதிராக வக்கிரமாக வண்ணமாக செயல்பட்டவர் சவுக்கு சங்கர். மூத்த பெண் பத்திரிக்கையாளர் சந்தியா ரவிசங்கர் மீது 'கோலமாவு சந்தியா' என்ற தலைப்பில் கீழ்த்தரமான‌ வக்கிரமான செய்திகளை பரப்பியவர் சவுக்கு சங்கர். இவர் மீது மகளிர் ஆணையத்தில் பெண் பத்திரிக்கையாளர் சந்தியா ரவி சங்கர் புகார் அளித்துள்ளார்...

    அறம் ஆன்லைன் பத்திரிக்கை ஆசிரியர் சாவித்திரி கண்ணன் சமீபத்தில் காவல்துறையால் கைது செய்யப்பட்டபோது அதை எதிர்த்து குரல் எழுப்பவில்லை. மாறாக அதை ஆதரித்து கொச்சையாக பேசியவர் சவுக்கு சங்கர். இரண்டு முறை நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்தித்தவர் அதில் தண்டனை பெற்றவர்!..சவுக்கு சங்கர் மற்றும் 

    பெலிக்ஸ் ஜெரால்ட் ஆகியோரின் வக்கிர கருத்துக்களுக்கு பத்திரிக்கையாளர்களிடையே கூட ஆதரவு இல்லை. ஆளும் திமுக அரசை எதிர்ப்பவர்களில் கூட பலர் இந்தக் கைது நடவடிக்கையை எதிர்க்கவில்லை. மாறாக  ஆதரிக்கிறார்கள்.. இந்த நிலையில் பெலிக்ஸின் மனைவியும், 'ரெட் பிக்ஸ்' யூடியூப் சேனல் நிறுவனத்தின் நிர்வாக உரிமையாளருமான ஜேன் ஆஸ்டின் பெலிக்ஸ் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

    கேள்வி 

    குற்றவாளியாக இருந்தாலும் சித்திரவதை பொய் வழக்கு கூடாது என்பது குறித்து கூறுங்கள்.



    பதில்:

    குற்றவாளியா? இல்லையா? போடப்பட்ட வழக்கு பொய்யானதா? பொருத்தமானதா?  என்பதை வழக்கின் முடிவில் இறுதி தீர்ப்பின் மூலம் நிலைநாட்ட படட்டும். சங்கர் நீதிமன்ற காவலில் இருக்கிறார் அவர் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியிருந்தால் அதை அவர் நீதிமன்றத்தில் கூறி நிரூபிக்கட்டும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை

    கேள்வி 

    ஆளும் அரசை அரசியல் கட்சிகளை விமர்சிக்க் கூடாதா? என்று எழுப்பப்படுவது குறித்து கூறுங்கள்.

    பதில்;

    அரசு மட்டுமல்ல யார் மீதும், எதன் மீதும் விமர்சனம் வைக்கலாம்! விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை.ஆனால் விமர்சனம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஆதாரத்தோடு இருக்க வேண்டும். விமர்சனத்தின் நோக்கம் சமுதாய முன்னேற்றத்தோடும் முழுமையான சம்பவத்தோடு தொடர்புடையதாகவும் இருக்க வேண்டும். அவதூறு, வன்மம், வக்கிரமம், பித்தலாட்டம். பொய்மை, திரித்தல், போன்றவற்க்கு விமர்சனத்தில் இடமில்லை. இவை விமர்சனத்தின் நம்பகத்தன்மை கெடுத்து விடும்.

    கேள்வி 

    பத்திரிகையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் மூத்த பத்திரிக்கையாளரான நீங்கள் கூற வருவது என்ன?

    பதில்:

    சமுதாய சூழலில் இருந்து பத்திரிக்கை துறையை மட்டும் தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. இன்றைய சமுதாய அமைப்பு என்பது உலகமய கார்ப்பரேட் ஆதிக்கம் என்பதாகும். சமுதாயத்தின் அனைத்து மோசமான நிகழ்வுகளுக்கும் பொதுவான அடிப்படை இதுதான். கார்ப்பரேட் ஆதிக்கம் எல்லாவற்றையும் 'சந்தை - சரக்காக'  ஆக்கிவிட்டது. பத்திரிகை துறையும் இதற்கு விதிவிலக்கு அல்ல.பத்திரிகை மற்றும் ஊடகத்துறையை சந்தையாகவும் , செய்தி மற்றும் தகவல்களை சரக்காகவும் ஆக்கிவிட்டது. இந்தச் சூழலில் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் கருத்துக்களும் செய்திகளும் பணத்துக்கு விலை போகின்றன. 

    சில பத்திரிகையாளர்களும் இதற்கு விலை போகிறார்கள்.

    கார்ப்பரேட்டுகளின் உலகமய ஆதிக்கம் துவங்கிய போதே புலனாய்வு ஜர்னலிசமும துவங்கிவிட்டது. இது தகவல் கருத்துக்களுக்கு பணம் என்பதை ஊக்குவித்தது. தகவலை , கருத்தை வெளியிடுவதற்கும் பணம்! வெளியிடாமல் இருப்பதற்கும் பணம்.! என்பதையும் பிளாக் மெயில் ஜர்னலிசத்தையும் உருவாக்கி விட்டது..

    இது கார்ப்பரேட் ஆதிக்கத்தின் விளைவால் உருவான ஒருவகை பொருளாதார அடிமைப் போக்கு ஆகும் தகவல்களும் கருத்துகளும் பணம் என்று ஆன பின்பு உண்மை, நேர்மை, நியாயம் எப்படி இருக்க முடியும்? இதற்கு மாறாக கேடு கெட்ட எல்லா குணக்கேடுகளையும் கொண்டதாக பணம் மாற்றிவிடும்.

    இது நபர்கள் சார்ந்த போக்கு அல்ல. மாறாக கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கம் சார்ந்த போக்காகும்.  இதில் சவுக்கு சங்கர்,பெலிக்ஸ் ஆகியோர் மட்டுமல்ல பல பத்திரிக்கையாளர்களும் ஊடகவியலாளர்களும் சிக்கியிருக்கிறார்கள்.

    எனவே இது நபர்களுக்கு எதிரான போராட்டம் அல்ல கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் ஆகும். கார்ப்பரேட் ஆதிக்கத்தை முறியடிக்காமல் இது போன்ற போக்குகளை முறியடிக்க முடியாது!


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad