சிவகாசி அருகே, சட்டவிரோதமாக பெண் குழந்தை விற்பனை... அரசு ஆரம்ப சுகாதார செவிலியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள மாரனேரி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரன். இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம் 4 வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த பெண் குழந்தையை, நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த மத்திய கூட்டுறவு வங்கி மேற்பார்வையாளர் ஜார்ஜ், இவரது மனைவி ஐரின் ஆகியோருக்கு 40 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு சட்ட விரோதமாக விற்பனை செய்துள்ளனர். குழந்தையை விற்பனை செய்வதற்கு மாரனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த செவிலியராக வேலை பார்த்து வரும் அஜிதா, கிராமப்புற செவிலியர் முத்துமாரியம்மாள் ஆகிய இருவரும் இடைத்தரகர்களாக செயல்பட்டிருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக மாரனேரி காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி, குழந்தையை விற்பனை செய்த குழந்தையின் பெற்றோர் பாண்டீஸ்வரன், பஞ்சவர்ணம், குழந்தையை சட்ட விரோதமாக விலைக்கு வாங்கிய ஐரின், இடைத்தரகர்களாக செயல்பட்ட செவிலியர்கள் அஜிதா மற்றும் முத்துமாரியம்மாள் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் ஜார்ஜை தேடி வருகின்றனர். இந்த நிலையில் குழந்தையை விற்பனை செய்வதற்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட செவிலியர்கள் அஜிதா, முத்துமாரியம்மாள் ஆகிய இருவரையும் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை