Header Ads

  • சற்று முன்

    சிவகாசி அருகே, பாழடைந்து கிடக்கும் மினி விளையாட்டு அரங்கை சீரமைக்க கோரிக்கை


    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து திருவில்லிபுத்தூர் செல்லும் சாலையில், ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகில் மினி விளையாட்டு அரங்கம் உள்ளது. கடந்த 2006ம் ஆண்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இந்த மினி விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு, விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. மாநில அரசு நிதி, மத்திய அரசு நிதி மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு என சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது. மினி விளையாட்டு அரங்கில் தடகளப் பயிற்சி மைதானம், கூடைப்பந்து மைதானம், ஓட்டப்பந்தயத்திற்கான மைதானம், கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. மேலும் தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடைபெறும் போது விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கான ஓய்வறைகளும், பயிற்சியாளர்கள் தங்கும் அறைகளும் கட்டப்பட்டன. போட்டிகளை காணவரும் ரசிகர்கள் அமரும் வகையில் காலரிகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த மினி விளையாட்டு அரங்கில் கடந்த 10 ஆண்டுகளாக எந்தவிதமான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படவில்லை. பராமரிப்பு பணியாளர்கள், காவலர்கள் இல்லாத நிலையில் விளையாட்டு அரங்கம் புதர் மண்டிக்கிடக்கின்றது. தற்போது விடுமுறை நாட்களில் இளைஞர்கள் பலரும் இங்கு விளையாட வருகின்றனர். மேலும் இந்தப்பகுதியில் உள்ள முதியவர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சிக்காக வருகின்றனர். செயல்படாமல் இருக்கும் இந்த மினி விளையாட்டு அரங்கை, முற்றிலுமாக சீரமைத்து மீண்டும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று விளையாட்டு ஆர்வலர்களும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad