கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
கொரோனா வைரஸ், நம் அனைவரின் வாழ்விலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. நாம் வாழும் முறை, நம் உறவுகள் என பலவற்றிலும் அதன் தாக்கத்தை பார்க்க முடிகிறது. ஆனால், இந்த பெருநோயிலிருந்து தற்காத்துக்கொள்வது என்பது குறித்து நமக்கு தொடர்ந்து அளிக்கப்படும் அறிவுரைகள் சற்றே கடினமாக அமையலாம்.நோயிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?
கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள உலக சுகாதார அமைப்பின் மிக முக்கியமான மற்றும் அடிப்படை பாதுகாப்பு அறிவுரை என்பது சுகாதாரமான முறையில் வாழ்வது.
• உங்களின் கைகளை அடிக்கடி, சரியான முறையில் சுத்தம் செய்யுங்கள். சோப்பு மற்றும் தண்ணீரை பயன்படுத்தியோ, ஆல்கஹால் நிறைந்த கிரிமிநாசினியை பயன்படுத்தியோ சுத்தம் செய்யுங்கள். இவை, உங்களின் கைகளில் வைரஸ் இருந்தால், அவற்றை கொன்றுவிடும்.
• உங்களின் கண்கள், மூக்கு மற்றும் வாயை தொடுவதை தவிருங்கள். நாம் பல பொருட்களை கைகளால் எடுத்து பயன்படுத்துவதால், கைகளில் வைரஸ் இருக்கக்கூடும். அவ்வாறு கண்கள், மூக்கு மற்றும் வாயை தொடுவதால், அவை நம் உடலினுள் நுழைய வாய்ப்புள்ளது.• உங்களுக்கு தும்மல் அல்லது இருமல் வந்தால், கைக்குட்டை/டிஷ்யு பேப்பரை பயன்படுத்துங்கள். அப்போதைய சமயத்தில் கைவசம் அவை இல்லை என்றால், உங்களின் மணிக்கட்டை வைத்து மறைத்துகொள்ளுங்கள்.
• பயன்படுத்திய டிஷ்யு பேப்பரை உடனடியாக அப்புறப்படுத்திவிடுங்கள். இது, வைரஸ் நிறைந்துள்ள அந்த காகிதத்தால் பிறருக்கு நோய்த்தொற்று ஏற்படுவதை தவிர்க்க உதவும்.
• இதே காரணத்திற்காகவே, மக்களை 2மீ சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
• பல இடங்களில், அத்தியாவசியத் தேவைகளை தவிர்த்து, வேறு எதற்காகவும் மக்களை வெளியே போக வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம், இருமல் மற்றும் தும்மல் பிரச்னை உள்ளவர்களை மக்கள் சந்திக்கும் வாய்ப்புகள் குறையும்.
• அப்படி நீங்கள் வெளியே சென்றுள்ளீர்கள் என்றால், ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக்கொள்வதை விடுத்து, 'பாதுகாப்பான முறையில் வரவேற்றுக் கொள்ளுங்கள்' என்கிறது உலக சுகாதார நிறுவனம். அதாவது, கை அசைத்தல், தலை தாழ்த்துதல் போன்ற முறைகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிறது.
முகமூடி மற்றும் கையுறைகள் பயனளிக்கின்றனவா?
நீங்கள் கடைகளில் வாங்கும் சாதாரணமான முகக் கவசங்கள் உங்களை வைரஸ்களிடமிருந்து பாதுகாக்காது. ஏனென்றால், அவை பெரும்பாலும் மிகவும் வலுவிழந்து இருக்கும், கண்களை மறைக்காது, பல நாட்கள் நீடித்து உழைக்காது. ஆனால், நோய்த்தொற்று உள்ள ஒருவரின் உமிழ்நீர் மற்றவர்கள் மீது பட்டு, அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க அவை உதவும்.
கருத்துகள் இல்லை