சென்னை போலீஸ் என்கவுன்டரில் ஒருவர் சுட்டுக் கொலை
சென்னை அயனாவரத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சங்கர் என்பவர் காவல்துறையினருடனான மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார்; போலீசாரை தாக்க முயன்றபோது இந்த சம்பவம் நடந்தது என்று காவல்துறை தெரிவிக்கிறது.
கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டுவந்த சங்கர் என்பவர் அயனாவரம் பகுதியில் இருப்பதாகக் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரைப் பிடிக்க அயனாவரம் காவல் நிலையத்தின் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான காவல்துறையினர் சென்றனர்.
அப்போது காவலர்களை சங்கர் தாக்கியதாகவும் அதில் முபாரக் என்ற காவலர் காயமடைந்த நிலையில் தற்காப்பிற்காக காவல்துறையினர் சுட்டதில் சங்கர் பலியானார் என காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது. அவரது உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த காவலர் முபாரக் சிகிச்சை பெற்று வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பாக தூத்துக்குடியில் துரைமுத்து என்பவர் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியதில் காவலர் ஒருவர் உயிரிழந்தது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த என்கவுன்டர் சம்பவம் நடந்திருக்கிறது.
கருத்துகள் இல்லை