நெல்லை அம்பை நகராட்சியில் போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி மோசடி
நெல்லை அம்பை நகராட்சியில் போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி மோசடி முகக்கவசம், சானிடைசர் வழங்கியதில் முறைகேடு என புகார்
நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சியில், கொரோனா தடுப்பு பணிகளுக்கான பொருட்கள் வாங்கியதில், ஒரு கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கொரோனா பரவி வரும் சூழலில், அதனைவிட கொடூர வைரஸ்கள் மக்களை தினந்தோறும் வாட்டி வருகிறது. அதாவது கொரோனா வைரஸை காரணங்காட்டி, பல மருத்துவமனைகளில் தொற்று பரவியதாக கூறி போலியான முறையில் சிகிச்சையளிக்கப்பட்டு, பணம் பறிக்கப்பட்டு வருகின்றன. வேறு சில இடங்களில் கொரோனா நிவாரண பொருட்களாக தரமற்றவற்றை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து தற்போது நெல்லையில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டதில் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதாவது நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஜின்னா என்பவர் மீதுதான் இந்த புகார் எழுந்துள்ளது.
புகாரை கூறியுள்ள நகராட்சி ஊழியர் ராமசுந்தரமணி, நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனைத்தொடர்ந்து, கொரோனா பெயரில் நடைபெற்று வரும் முறைகேடுகளை விரட்டியடிக்க வேண்டும் என்று பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் ஒரு முகக்கவசம் 630 ரூபாய்க்கு வாங்கப்பட்டிருப்பதாகவும், தரமற்ற ப்ளீச்சிங் பவுடர் வாங்கப்பட்டிருப்பதாவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் கொரோனா தடுப்பு பொருட்களை வாங்க ஒப்புதல் அளித்துவந்த சுகாதாரத்துறை அதிகாரி சிதம்பர ராமலிங்கம் வேறு மாவட்டத்திற்கு மாறுதலாகி சென்றிருப்பது நகராட்சி ஊழியர்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை