Header Ads

  • சற்று முன்

    ஓ.பி.சி இட ஒதுக்கீடு குறித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு...




    மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு வழங்குவது குறித்து 3 மாதங்களில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
     
    மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழக அரசு, அதிமுக, திமுக, பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. 

    அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
     

    இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சில் வாதத்தை ஏற்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், மருத்துவ கவுன்சில் விதிகளில், மாநில இட ஒதுக்கீடு பின்பற்ற கூடாது என, எந்த விதிகளும் இல்லை என்பதை சுட்டிக்காட்டினர்.

    மேலும், மத்திய அரசு கட்டுப்பாட்டில் இல்லாத கல்வி நிலையங்களில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க, சட்ட ரீதியாகவோ, அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்வித தடையும் இல்லை என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
     
    மருத்துவ மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து, மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறை செயலாளர்கள், இந்திய மருத்துவ கவுன்சில் செயலாளர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து, கலந்தாலோசித்து, இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுத்து, 3 மாதங்களில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
     
    உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பின்னர் பேட்டியளித்த திமுக வழக்கறிஞர் வில்சன், இது தமிழக அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.

    இந்த தீர்ப்பு, சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்த வில்சன், அடுத்த கல்வியாண்டு முதல் OBC பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad