பல்லாவரம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கடை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. இதனை அதே பகுதியை சேர்ந்த சண்முகவேல் என்பவர், ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டி வாடகைக்கு விட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்த கடைகளின் மேல் தளத்திலும் மாடி எழுப்பும் வேலைகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார். இதனால் புகழ்பெற்ற அகத்தீஸ்வரர் ஆலயத்தின் கோபுரம் மறைக்கப்படுவதாகவும், எனவே அரசு புறம்போக்கு நிலத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முப்பதுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கர் நகர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் கட்டுமான பணிகள் மேற்கொண்டு நடைபெறாதவாறு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை