Header Ads

  • சற்று முன்

    மீண்டும் கொரோனா பாதிப்பால் இறந்த மருத்துவர் உடலை தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த மக்கள்


    கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம்புலன்ஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய பகீர் சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது

    சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக இருந்த, 55 வயதான, நரம்பியல் அறுவை சிகிச்சை டாக்டருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.

    உயிரிழந்த மருத்துவரின் மகள் வானகரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார். இப்படியான ஒரு இக்கட்டான சூழ்நிலையில்தான், அந்த மருத்துவரின் உடல் நேற்று இரவு கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயான பகுதியில் அடக்கம் செய்ய எடுத்துச்செல்லப்பட்டது. ஆனால் அப்பகுதியில் உள்ள மக்கள் ஒன்று சேர்ந்து கொண்டு மருத்துவர் உடலை தங்கள் பகுதியில் அடக்கம் செய்யக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். மருத்துவரின் உடலில் இருந்து கொரோனா வைரஸ் நோய் தங்கள் பகுதிக்கு வேகமாக பரவி விடும் என்று, அறியாமை காரணமாக அவர்கள் அச்சம் வெளிப்படுத்தினர். அத்தோடு விடவில்லை. மருத்துவர் உடலை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் மீது கற்களை வீசி கொடூர தாக்குதல் நடத்தினர். கம்புகளை எடுத்து வந்து ஓட்டுநரையும் அடித்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து காவல்துறையினர் தலையிட்டு மருத்துவர் உடலை, வேறு ஒரு பகுதிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர். கடந்தவாரம் ஆந்திராவை சேர்ந்த ஒரு மருத்துவர் சென்னையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானார். அவர் உடலை அடக்கம் செய்யப் போகும் போதும் இதே போன்று உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பெரும் பிரச்சனை செய்தனர். இப்படியான நிலைமை தொடர்கதையாகி வந்தால் மருத்துவர்கள் மத்தியில் சிகிச்சை அளிப்பதற்கான ஆர்வமே போய்விடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் காவல்துறை இந்த விஷயத்தை சீரியஸாக கையில் எடுத்துள்ளது. அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், கலவரத்தில் ஈடுபடுதல், ஆயுதங்களால் தாக்குதல், சட்டவிரோதமாகத் தடுப்பில் வைத்து தாக்குதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 20 பேரை கைது செய்துள்ளனர். பொதுமக்கள் தாக்கியதில் ஆம்புலன்ஸ் டிரைவர் படுகாயம் அடைந்துள்ளார். 

    ரத்தம் சொட்ட சொட்ட அவர் ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். எனவே கூட இருந்த இன்னொரு டாக்டர்தான் வாகனத்தை இயக்கிக் கொண்டு வேறு ஒரு மயான பகுதிக்குச் சென்று டாக்டர் உடலை அடக்கம் செய்ய உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது. உரிய பாதுகாப்புடன் அடக்கம் செய்யும்போது, இறந்தவர் உடலிருந்து நோய் வேறு மக்களுக்கு பரவாது என்ற விழிப்புணர்வு மக்களிடையே இல்லாததுதான் இதுபோன்ற தாக்குதல்களுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மக்களுக்காக சேவையாற்றியவரின் உடலை அடக்கம் செய்வதை எதிர்ப்பது மனிதாபிமானம் அற்றது என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் செந்தில் குற்றஞ்சாட்டியுள்ளார். இறந்தவரின் உடலிலிருந்து கொரோனா பரவாது, அது தொடர்பாக எந்த ஒரு அறிக்கையும் இதுவரை வெளியாகியது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். கொரோனா சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்களின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று அரசு மருத்துவர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad