"தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் மேலும் 25 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், 62 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதன் மூலம், தற்போது நோயுடன் இருப்பவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறைந்துவருகிறது.
கொரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் முதலமைச்சர் பேசினார்.
"கொரோனா தடுப்புப் பணி எப்படி நடைபெறுகிறது, அரசு அறிவித்த அனைத்தையும் மாவட்ட நிர்வாகம் எப்படி செயல்படுத்திக்கொண்டிருக்கிறது என்பது குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளின்படியே மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறது. நோயைத் தடுப்பதுதான் முக்கியம். அரசு அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருக்கிறது. பிரதமரும் இதே கருத்தைத்தான் வலியுறுத்தினார்கள். அனைத்து மாநில முதலமைச்சர்களும் தடுப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும், மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்கள்.
மத்திய சுகாதாரத் துறை, உலக சுகாதார அமைப்பு கூறுகின்ற வகையில் தமிழக அரசு இந்த நோய்த் தடுப்புப் பணியை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நடவடிக்கையின் காரணமாக நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது" என முதலமைச்சர் அப்போது தெரிவித்தார்.
இந்நோய்க்கான மருந்துகள், மருத்துவ உபகரணங்களை இருப்பு வைப்பதில் தமிழ்நாடு நாட்டிலேயே முதலிடத்தில் இருப்பதாகவும் முதல்வர் தெரிவித்தார். "இந்நோயை எதிர்கொள்ள மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு பணி ஆணை வழங்கப்பட்ட நாள் ஜனவரி 31ஆம் தேதி. மருந்துகள் வழங்க பணி ஆணை வழங்கப்பட்ட நாள் பிப்ரவரி முதல் வாரம். இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி 146 கோடி ரூபாய்.
மேலும் விமான நிலையங்களில் ஜனவரி 23ஆம் தேதியே பயணிகளைச் சோதனை செய்யும் பணி துவங்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் முதன் முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நாள் மார்ச் 7ஆம் தேதி. இதையடுத்து திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், பூந்தமல்லி ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தும் வசதிகள் மார்ச் 15ஆம் தேதி துவங்கப்பட்டன. பொது இடங்களில் கூடுவதற்குத் தடை, எல்லையோர மாவட்டங்களில் மால்கள், திரையரங்குகளை மூடுவதற்கான உத்தரவு ஆகியவை அன்றைய தினமே பிறப்பிக்கப்பட்டன. துவக்கப் பள்ளிக்கூடங்களும் அன்றே மூடப்பட்டன. மாநில எல்லைகளில் மார்ச் 16ஆம் தேதி சோதனைகள் துவங்கப்பட்டன.
தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மார்ச் 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு அறிவிப்பிற்கு முன்பாகவே இங்கே அறிவிக்கப்பட்டுவிட்டது. அதற்கு பிறகு மத்திய அரசு மார்ச் 24ஆம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது. அதை மாநில அரசு நடைமுறைப்படுத்தியது.
கருத்துகள் இல்லை