சென்னை கோயம்பேட்டில் வெளியூர் செல்லும் பேருந்துகள் அதிரடி நிறுத்தம்
சென்னை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவும் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தாலும் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் அனைத்து பேருந்து சேவைகளும் பிற்பகல் 2.30 மணி உடன் உடனடியாக நிறுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு வரும் ஏப்ரல் 1ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் அறிவிப்பின்படி இன்று மாலை 6 மணி முதல் பொதுப்போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நீண்ட தூரம் செல்லும் பேருந்து சேவைகள் அனைத்தும் சென்னையில் இன்று மதியம் முதல் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. திருச்சி, கோவை, மதுரை, நெல்லை உள்பட வெளியூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் ஓரிடத்தில் கூட்டமாக குவிவதை தடுக்கவும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும் அரசு உடனடியாக பேருந்து சேவைகளை நிறுத்தி உள்ளது.
இதனால் சென்னைவாசிகள் பலர் சொந்த ஊருக்கு போகலாம் என்று எண்ணி பேருந்து நிலையங்களுக்கு சென்ற நிலையில் ஏமாற்றம் அடைந்தனர். நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 144 தடை உத்தரவு பிறப்பித்த ஒரு மணி நேரத்திலேயே சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு செல்ல கோயம்பேட்டுக்கு படை எடுத்ததால் பெரும் கூட்டம் நிரம்பி வழிந்தது. மக்கள் ஆபத்தை உணராமல் கூட்டம் கூட்டமாக பேருந்துகளில் பயணித்து சொந்த ஊருக்கு சென்றனர்.
கருத்துகள் இல்லை