நடிகர் சங்க தேர்தலில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சென்னையில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த நடிகர் சங்க தேர்தல் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
நடிகர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் ஏராளமான குளறுபடி இருப்பதாகவும், வாக்காளர் பட்டியலில் பலரது பெயர்கள் விடுபட்டு விட்டது என்பதால் தேர்தலை ரத்து செய்யக் கோரியும், நடிகர் சங்க உறுப்பினர்கள் பெஞ்சமின், ஏழுமலை ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர் .
அந்த வழக்கில், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்கவும், தேர்தலில் பதிவான வாக்குகளை நுங்கம்பாக்கத்தில் உள்ள வங்கியில் லாக்கரில் வைக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே, நடிகர் சங்க நடவடிக்கைகளை கவனிக்க சென்னை மாவட்ட பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை சிறப்பு அதிகாரியாக நியமித்து சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டார். அதனை எதிர்த்து நடிகர்கள் நாசர், விஷால் கார்த்திக் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அனைத்து வழக்குகளிலும் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி கல்யாண சுந்தரம் இன்று தீர்ப்பளித்தார்.
பதவிக்காலம் முடிவடைந்த பிறகு நாசர் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகம் அறிவித்த தேர்தல் செல்லாது என்பதால், கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் செல்லாது என நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். நடிகர் சங்கத்திற்கு 3 மாதங்களுக்குள் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும், தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமிக்கப்படுவதாகவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
புதியதாக வாக்காளர் பட்டியல் தயாரித்து தேர்தலை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி, பதவிக்காலம் முடிவடைந்த பிறகு நடிகர் சங்க குழு தேர்தல் அறிவித்தது தவறு என்று சுட்டிக்காட்டினார். புதிதாக தேர்தல் நடத்தி முடிக்கும் வரை நடிகர் சங்க நடவடிக்கைகளை பதிவுத்துறை உதவி ஐ.ஜி.கீதா தொடர்ந்து மேற்கொள்வதற்கும் நீதிபதி அனுமதி அளித்தார். இதனிடையே நடிகர் சங்க தேர்தலில் பாக்கியராஜ் தலைமையில் போட்டியிட்ட சுவாமி சங்கரதாஸ் அணியினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஐசரி கணேஷ், நடிகர் சங்கத்தின் கஜானாவை விஷால் காலிசெய்துள்ளதாக குற்றம்சாட்டினார். உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து விஷால் மேல்முறையீடு செய்வது, நடிகர் சங்கத்திற்கு செய்யும் துரோகம் என்றும் சாடினார்.
கருத்துகள் இல்லை