Header Ads

  • சற்று முன்

    தமிழக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் தாமதம்' : உயர் நீதிமன்றத்தை நாடும் திமுக


    'தமிழக உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் நிலையில், முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் இருப்பதாகவும் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடப்பதாகவும் தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தையும் அக்கட்சி அணுகியுள்ளது.

    தமிழ்நாட்டி்ல உள்ளாட்சித் தேர்தல்களின் ஒரு பகுதியாக, ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் டிசம்பர் 27, டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல்கள் நடைபெற்றன. இந்தத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. இதில், மாவட்ட வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கான தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் நெருக்கமான போட்டியில் உள்ளன.

    இந்த நிலையில், தி.மு.க. பல இடங்களில் வெற்றிபெற்றும் முடிவுகளை அறிவிக்க தாமதம் காட்டுவதாகவும் பல இடங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ள தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், இது தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமியைச் சந்தித்து புகார் தெரிவித்தார்.

    இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், "நடந்து முடிந்திருக்கக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தின் அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஒரு மிகப் பெரிய வெற்றியை எதிர்நோக்கி, முந்திக்கொண்டிருக்கிறது. ஏறக்குறைய 80 சதவீதத்திற்கு மேல் எங்கள் அணி வெற்றிபெற்றுக்கொண்டிருக்கிறது; முன்னணியில் உள்ளது. இந்த நிலையில், இதை தடுத்து நிறுத்தும் முயற்சியில் அ.தி.மு.கவும் அதற்குத் துணையாக காவல்துறையினரும் அதிகாரிகளும் திட்டமிட்டு சதி செய்து, இந்த வெற்றியைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்" என குற்றம்சாட்டினார்.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையிலும், அறிவிக்கப்பட வேண்டிய தேர்தல் முடிவுகளை இதுவரை அறிவிக்கவில்லை என்றும் சேலம் மாவட்டம் கொளத்தூர் தொகுதியில் 800 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வெற்றி பெற்றுள்ள நிலையில் மற்றொரு பகுதியில் அ.தி.மு.க. வெற்றிபெற்று, அதனை அறிவித்த பிறகுதான் இதை அறிவிப்போம் என அதிகாரிகள் கூறுவதாகவும் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

    முதலமைச்சரின் மைத்துனர் வெங்கடேசன் வழிகாட்டுதலின் அடிப்படையில் அதிகாரிகள் செயல்படுவதாக குற்றம் சாட்டிய மு.க. ஸ்டாலின், கொங்கநாதபுரத்தில் தி.மு.க. வெற்றிபெற்றுள்ளதாகவும் போடி ஒன்றியத்தில் தி.மு.க. முன்னணியில் இருந்தாலும் அதை மறைப்பதாகவும் கூறினார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு தொலைபேசியிலும் பேக்ஸிலும் புகார் சொல்லியிருப்பதோடு, மாவட்ட அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தும் பலனில்லாததால், தானே மாநில தேர்தல் ஆணையத்திற்கு நேரில் வந்திருப்பதாக மு.க. ஸ்டாலின் கூறினார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad