Header Ads

  • சற்று முன்

    செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட மாணவிக்கு நர்சிங் பட்டப்படிப்பு படிக்க கலெக்டர் கந்தசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.


    வந்தவாசி தாலுகா காவனியாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சடையன் (வயது 50). இவரது மனைவி வசந்தி. இவர்கள் இருளர் சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு சுரேஷ், சுதா, சுதாகர், சுகன்யா (18) என 4 குழந்தைகள் உள்ளனர். இவர்களில் சுரேசுக்கும், சுதாவுக்கும் திருமணம் ஆகிவிட்டது. சுதாகர் கூலி வேலை செய்து வருகிறார்.
    சுகன்யா பிளஸ்-2 முடித்து உள்ளார். சடையன் குடும்பத்தினர் மரம் வெட்டுதல் உள்பட தினக்கூலி வேலை செய்து மிகவும் ஏழ்மையான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். சடையன் குடும்பத்தினர் கடந்த 2013-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள பூச்சி அத்திப்பட்டு கிராமத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்த போது வருவாய்த்துறையினர் மீட்டனர்.

    இந்த நிலையிலும் சடையன் குடும்பத்தினர் தங்கள் முதல் மூன்று பிள்ளைகளை படிக்க வைக்க முடியவில்லை என்றாலும், கடைசி மகளை பல்வேறு சிரமங்களுக்கு இடையே பிளஸ்-2 வரை படிக்க வைத்துள்ளார். சுகன்யா தங்களது குடும்பத்தினர் மற்றும் சமுதாய மக்கள் படும் கஷ்டத்தையும், பெற்றோர்களின் ஊக்கத்தினாலும் படிப்பை தொடர்ந்துள்ளார்.
    தங்கள் குடும்பம் கொத்தடிமையில் இருந்து மீட்கப்பட்டு மீண்டும் சொந்த கிராமத்திற்கு வந்தவுடன், வந்தவாசி அமுடூர் அரசுப்பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்து பொதுத்தேர்வில் 286 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் சென்னை ராயபுரம் நார்த்விக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் பாட பிரிவில் சேர்ந்து தற்போது பிளஸ்-2 முடித்து உள்ளார். பிளஸ்-2 பொதுத்தேர்வில் 600-க்கு 266 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேற்கொண்டு படிக்க ஆசை இருந்தாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக எப்படி மேற்படிப்பு படிக்கப்போகிறோம் என்ற கவலையில் அவர் இருந்துள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, சுகன்யா மேற்படிப்பு படிப்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டார். கலெக்டரின் முயற்சியால் சுகன்யா வந்தவாசி அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் 3 ஆண்டுகள் நர்சிங் பட்டப்படிப்பினை எந்தவித கட்டணமும் இல்லாமல் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவி சுகன்யா நேற்று தனது பெற்றோருடன் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது சுகன்யாவிற்கு புதிய துணி, இனிப்பு, பழம் போன்றவற்றை கலெக்டர் வழங்கினார்.

    அதைத்தொடர்ந்து சுகன்யா மற்றும் குடும்பத்தினர் கூறுகையில், ‘நன்றாக படித்து எங்கள் சமுதாய மக்களுக்கு சேவை செய்தும், அவர்களின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவோம். தற்போது எங்கள் சமுதாய மக்கள் கொத்தடிமை தனத்தில் இருந்து படிப்படியாக மீண்டு வருகிறார்கள். தற்போது அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். எங்கள் சமுதாய குழந்தைகளுக்கு சரியான முறையில் கல்வி கிடைப்பதற்கு அனைத்து உதவிகளையும் செய்வோம்’ என்றனர்  

    செய்தியாளர் :திருவண்ணாமலை - மூர்த்தி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad