நாட்டை காப்பாற்றும் வரை தர்ணா தொடரும்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
கொல்கத்தாவில் பாஜக அரசுக்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்டு வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி "நாட்டை காப்பாற்றும் வரை தனது தர்ணா தொடரும்" என தெரிவித்துள்ளார்.
சாரதா நிதி நிறுவன மோசடி மற்றும் ரோஸ் வேலி ஆகிய வழக்குகளில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று மாலை சென்றனர். அங்கு, சி.பி.ஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், சி.பி.ஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டில் ஆலோசனை நடத்திய முதல்வர் மம்தா , கூட்டாட்சி முறையை பாதுகாக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். உடனடியாக, கொல்கத்தா மெட்ரோ சாலைப் பகுதியில் தர்ணாவையும் தொடங்கினார். அவருடன் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு தொடுத்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேற்கு வங்காள போலிஸ் ஆணையர் ராஜீவ் குமார் சாட்சியங்களை அழிக்க முயற்சிக்கிறார் என்ற சிபிஐயின் கூற்றிற்கு ஆதாரங்களை சேர்க்குமாறு சிபிஐயிடம் கோரியுள்ளது.
மேலும் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ கோரியபோதிலும் வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.மம்தா பானர்ஜியின் தர்ணாவுக்கு ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
"எனது இந்த சத்யாகிரகம் நாட்டையும், அரசமைப்பையும் காப்பாற்றும்வரை தொடரும்" என மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மம்தாவுக்கு ஆதரவாக, மேற்கு வங்கத்தில் ஆங்காங்கே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேரந்தவர்கள் போராட்டங்களையும் நடத்தினர். இதற்கிடையில்," சிபிஐ தனது கடமையை செய்ய வேண்டும். சிபிஐ தனது கடமையை செய்தால் அரசியல் காரணம் என்கின்றனர். செய்யவில்லை என்றால் கூண்டில் அடைப்பட்ட கிளி என்று இருதரப்பிலும் பேசுகின்றனர்" என மம்தாவின் போராட்டம் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை