கோவை காருண்யா பல்கலைக்கழகம் நிர்வாகம் அத்துமீறல்
கோவை, காருண்யா பல்கலைக்கழக நிர்வாகத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்திய மாணவர்கள்மீது, போலீஸார் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, சிறுவானி சாலை சாடிவயல் பகுதியில், காருண்யா பல்கலைக்கழகம் உள்ளது. கலை அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட படிப்புகள், இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ளன. தமிழகம் மட்டுமல்லாது, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான மாணவர்கள் அங்கு பயின்றுவருகின்றனர். இந்நிலையில், காருண்யா பல்கலைக்கழகத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாகக் கூறி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக நிர்வாகம், தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர்களிடையே 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு ஏற்படாததால், மாணவர்களின் போராட்டம் இரவு வரை நீடித்தது. இதனிடையே, இரவு ஒரு பேராசிரியர் தனது காரில் வெளியே செல்ல முயன்றுள்ளார். அப்போது, அவருக்கு வழிவிடாமல் மாணவர்கள் தடுத்துள்ளனர். மாணவர்களின் தடுப்பை மீறி, கார் சென்றுள்ளது. இதில், மாணவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, மாணவர்கள் பல்கலைக்கழகக் கட்டடங்கள் மற்றும் பேருந்துகள்மீது கல்வீச்சு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தி மாணவர்கள் கூட்டத்தைக் கலைத்தனர். பின்னர், பல்கலைக்கழகத்துக்கு இரண்டு வாரம் விடுமுறை அறிவித்து, இரவோடு இரவாக மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.
இதுகுறித்து பல்கலைக்கழக மாணவர்கள் கூறுகையில், "நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகம் வசூலித்துவந்தார்கள். எங்களுக்காக, மாணவர்கள் சங்கம் தொடங்க அனுமதி கேட்டோம். அதற்கும் அனுமதி வழங்கவில்லை. மாணவிகளின் விடுதியிலும் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றை எதிர்த்து, நாங்கள் பலமுறை போராடியும் பலனில்லை.
கார்ப்பரேட் நிறுவனம் போல செயல்படுகின்றனர். கல்விக் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி போடுகிறார். மாணவர்கள் பொறுமையாகத்தான் இருந்தோம். முதலில் எங்களது கோரிக்கையை ஏற்பதாகச் சொன்ன பல்கலைக்கழக நிர்வாகம் பின்னர், 'நீங்கள் சொல்றதைக் கேட்க மாட்டோம்' என்றனர். அது மட்டுமல்லாமல், பேராசிரியர் ஒருவரின் கார் மோதி, மாணவர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகுதான் நாங்கள் பொறுமையை இழந்தோம்" என்றனர்.
கருத்துகள் இல்லை