• சற்று முன்

    இரு துருவங்கள் சந்திப்பு !



    நடிகர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்த நடிகர் கமல்ஹாசன்.

    அரசியல் சுற்றுப் பயணத்துக்குத் தயாராகி வரும் நடிகர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் தோட்ட இல்லத்துக்கு சென்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். 
    நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியல் களத்தில் இறங்க தயாராகி வரும் நேரத்தில் நடைபெற்றுள்ள இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரங்களிலும், இரு தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
    ராமேசுவரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து வரும் 21-ஆம் தேதி அரசியல் பயணத்தைத் தொடங்க இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அன்று மாலையே மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். அப்போது, கட்சியின் பெயரை அறிவித்து கட்சியின் கொடியையும் அவர் ஏற்றவுள்ளார். 


    அரசியல் பயணத்துக்கு முன்பாக, பல்வேறு தரப்பினரையும் கமல் நேரில் சந்தித்துப் பேசி வருகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் உள்ளிட்டோரை அவர் அண்மையில் சந்தித்துப் பேசினார்.
    ரஜினியுடன் சந்திப்பு: இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று ரஜினியை நடிகர் கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார். சுமார் 10 நிமிஷம் வரை இந்தச் சந்திப்பு நீடித்தது. பின்னர் போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து புறப்பட்ட கமல்ஹாசனை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார் ரஜினிகாந்த். இருவரும் ஒருவருக்கொருவர் வணங்கி விடை பெற்றனர். 

    நட்பு மட்டுமே பிரதானம்: ரஜினியைச் சந்தித்து விட்டு திரும்பும் போது செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியது:
    நான் எனது வாழ்க்கையில் மிக முக்கியமான பயணத்தைத் தொடங்க உள்ளேன். அதன் பொருட்டு எனக்கு விருப்பமானவர்களைச் சந்தித்து வருகிறேன். அந்த அடிப்படையில், எனது நண்பர் ரஜினிகாந்த்தை சந்தித்துப் பேசினேன். இதில் அரசியல் கலப்பு ஏதும் இல்லை. முற்றிலும் நட்பு ரீதியானது. எங்களது 40 ஆண்டுகால நட்பின் அடையாளமாகவே இந்தச் சந்திப்பு நடந்தது.
    வாழ்த்துத் தெரிவித்தார் ரஜினி: எனது அரசியல் பயணத்துக்கு நண்பர் ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்தார். எனது கட்சியின் தொடக்க விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்த்தையும் அழைத்து இருக்கிறேன். வருவதும், வராததும் அவரது விருப்பம். இந்தப் பயணம் தொடர்பாக பிற அரசியல் தலைவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார் கமல்.

    அரசியலிலும் வெவ்வேறு பாணி: ரஜினி
    இந்தச் சந்திப்பை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியது:
    அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நண்பர் கமல்ஹாசனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இறைவன் அவருக்கு நல்ல உடல்நலத்தையும் ஆசியையும் தர வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். பணத்துக்கோ, புகழுக்கோ கமல்ஹாசன் அரசியலுக்கு வரவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நோக்கில் வந்துள்ளார். அதுதான் நமக்கு தேவை.

    வெவ்வேறு பாணி: 
    சினிமாவில் என் பாணி வேறு, கமல்ஹாசன் பாணி வேறு என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோலத்தான் அரசியலிலும் எனது பாணியும், அவரின் பாணியும் வேறுபட்டிருக்கும். ஆனால், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் இருவரின் குறிக்கோள் என்றார் நடிகர் ரஜினிகாந்த்.
    இந்த நிலையில், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் சுற்றுப் பயணம் அமையும் என்றும், அநேகமாக திருச்சியில் முதல் பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்றும் அவரது மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    ராகவேந்திரர் கோயிலில் வழிபாடு: இதற்கிடையில், ரஜினிகாந்த் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரா மடத்தில் ஞாயிற்றுக்கிழமை சாமி தரிசனம் செய்தார். சிறிது நேரம் பிரார்த்தனையில் ஈடுபட்ட அவர், பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ரஜினியின் வருகையை அறிந்து அங்கு மக்கள் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad