• சற்று முன்

    ஜெயலலிதாவின் கனவுகளை புறக்கணித்தால் இனி ஆதரவு இல்லை.



    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரிடம் அளித்த கடிதத்தின் விவரம் வெளியாகியுள்ளது.அதிமுக இரு அணிகள் இணைப்பைத் தொடர்ந்து, பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலாவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, இன்று காலை சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்துக்கு அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் வந்திருந்தனர். நேற்று 18 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே வந்திருந்த நிலையில், இன்று காலை விளாத்திக்குளம் தொகுதி எம்.எல்.ஏ. உமா மகேஸ்வரியும், தினகரன் வீட்டிற்கு வந்திருத்தார்.இதையடுத்து, அனைவரும் டி.டி.வி.தினகரனுடன் ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர், காலை 10 மணியளவில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், ஆளுநர் வித்யாசாகரிடம் தனித்தனியாக கடிதம் அளித்ததாக கூறப்படுகிறது.

    ஆளுநரைச் சந்தித்தப் பின்னர், ஆளுநர் மாளிகையின் பின்வாசல் வழியாக புறப்பட்டுச் சென்ற 19 எம்.எல்.ஏ.க்களும், சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி.தினகரன் வீட்டுக்குச் சென்று, மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனிடையே, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் கொடுத்ததாக கூறப்படும் கடித விவரங்கள் வெளியாகியுள்ளன. அதில், எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக  கூறப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சி அதிகாரத்தையும், அரசு இயந்திரத்தையும் தவறாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ள எம்.எல்.ஏ.க்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

    எடப்பாடி பழனிச்சாமி ஊழலை ஊக்குவித்து, கட்சியின் பெயரை கெடுப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள எம்.எல்.ஏ.க்கள், அவருக்கு அளித்து வந்த ஆதரவை தாங்கள் 19 பேரும் வாபஸ் பெற்றுவிட்டதால், ஆளுநர் தலையிட்டு அரசமைப்பு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி அரசு ஊழல் செய்து வருவதாக குற்றஞ்சாட்டிய ஓ.பன்னீர்செல்வத்துக்கு தற்போது துணை முதலமைச்சர் பதவி வழங்கி, அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் அந்த கடிதத்தில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

    ஜெயலலிதாவின் கனவுகளை முற்றிலும் புறக்கணித்து விட்டதால், இனிமேல் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்க முடியாது என்றும் அந்த கடிதத்தில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad